தில்லியில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க தொடர்ந்து போராடுவோம்: ராகுல் காந்தி
தில்லியில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெற்கு தில்லியில் சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்காக சுமார் 14 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, தில்லி காங்கிரஸ் சார்பில் "மரங்களைக் காப்போம்' என்ற இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. தில்லியில் மரங்கள் வெட்டப்படுவதால் பசுமைப் போர்வை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் அக்கறை இல்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ள கருத்து:
தில்லியில் வளர்ச்சி என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசின் ஒப்புதல்படி, மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியுள்ளது. வாழ்வதற்கு மரங்கள் அவசியம் என்பதும், மரங்களை வெட்டினால் அதற்கு ஈடு செய்ய முடியாது என்பதும் குழந்தைகளுக்குக்கூட தெரியும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடங்கியுள்ள "மரங்களைக் காப்போம்' இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம். அனைவரும் இணைந்து மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்ய காவல் ஆணையருக்கு அமைச்சர் கடிதம்
மரங்கள் வெட்டப்படும் விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தில்லி காவல் துறை ஆணையர் ஏ.கே. பட்நாயக்கிற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி உயர் நீதிமன்றத் தடை உத்தரவுக்குப் பிறகும் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதாகக் கூறி, தேசியக் கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்துக்கு (என்பிசிசி) எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர் விமலேந்து ஜா சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சரோஜினி நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால், புகார் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல் நிலையத்தில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லி வனத் துறை சார்பில் சரோஜினி நகர் காவல் ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும்பபடி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்து விவாதிக்கும் வகையில் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஜூலை 4-ஆம் தேதி வரை மரங்கள் வெட்டப்படாது என தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்தின் (என்பிசிசி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால், இதற்கு எதிராக தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெற்கு தில்லியில் உள்ள நேதாஜி நகரில் மரங்களை செவ்வாய்க்கிழமை வெட்டியதைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத் தடை உத்தரவுக்குப் பிறகும் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதாகக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் விமலேந்து ஜா சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்துக்கு (என்பிசிசி) எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை ஜூலை 4-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.