குளிருடன் தொடங்கிய செப்டம்பர் மாதம்! ஐந்து ஆண்டுகளில் முதல்முறை
வழக்கத்திற்கு மாறாக தேசியத் தலைநகர் வலயத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக குளிர் நிறைந்ததாக
வழக்கத்திற்கு மாறாக தேசியத் தலைநகர் வலயத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக குளிர் நிறைந்ததாக செப்டம்பர் முதல்வாரம் இருந்தது, புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இந்த சீசனில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 26 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இதுகுறித்து பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மைய (ஆர்டபிள்யூஎஃப்சி) அதிகாரிகள் கூறுகையில், "தேசியத் தலைநகர் வலயத்தில் மட்டுமின்றி உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் மழை பெய்துள்ளது' என்றனர்.
பருவமழை முடிவு குறித்து வானிலை ஆய்வு மைத்தினர் இன்னும் முறையாக அறிவிப்பு வெளியிடாத போதிலும், செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து பருவமழையின் தீவிரம் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை தேசியத் தலைநகர் வலயம்,குருகிராமில் பெய்த மிதமான மழையின் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேபோன்று, தில்லியிலும், கௌதம் புத் நகரிலும் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த சில தினங்களாகவே வெப்பநிலை குறைந்த அளவில்தான் இருந்து வருகிறது. இதுகுறித்து ஆர்டபிள்யூஎஃப்சி அதிகாரி கூறுகையில், "கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததைப் பார்க்க முடிந்தது. இந்த மழை அடுத்த இரு தினங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில், காற்றில் ஈரப்பதமும் அதிகளவில் இருந்து வருகிறது. இதுவும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
குருகிராமில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருந்தது. வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காற்றில் ஈரப்பதம் 78 சதவீதமாக இருந்தது.
இதற்கிடையே, இதமான வானிலை காரணமாக தில்லியின் மின்தேவையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் நாளொன்றுக்கு மின்நுகர்வு 227 லட்சம் யூனிட்டாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை இது 192 லட்சம் யூனிட்டாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.