FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேருந்துகள் பற்றாக்குறை பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்! கேஜரிவாலுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

தில்லி போக்குவரத்துத் துறையில் நிலவிவரும் 7 ஆயிரம் பேருந்துகள் பற்றாக்குறை பிரச்னையில் முதல்வர் கேஜரிவால் கவனம் செலுத்த வேண்டும்

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தில்லி போக்குவரத்துத் துறையில் நிலவிவரும் 7 ஆயிரம் பேருந்துகள் பற்றாக்குறை பிரச்னையில் முதல்வர் கேஜரிவால் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேட்டுக்கொண்டார்.
தில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் "13ஆவது நீடித்த உச்சி மாநாடு' வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 
உலகில் நான்காவது மிகப்பெரிய மெட்ரோ அமைப்பாக தில்லி இருந்து வருகிறது. உலகில் எங்கும் இல்லாத வகையில் மிகவும் வாங்கக்கூடிய கட்டணத்தில் தில்லி மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இது ஒரு முதல்தர சொத்தாகவும் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பலர் தில்லி மெட்ரோ ரயிலைத் தவிர்த்து வருவதாக எனது இனிய தில்லி முதல்வர், வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால், தில்லி மெட்ரோ பயணிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையோ உண்மைகளைப் பொய்யாக்குவதாக உள்ளது. சிலர் கவலையாக இருக்க விரும்பினால், தில்லியில் உள்ள இதர பொதுப் போக்குவரத்து தொடர்பான உண்மை குறித்து கவலைப்பட வேண்டும். தில்லி அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்துத் துறையில் 11 ஆயிரம் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 7 ஆயிரம் பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. இதுகுறித்து அவர்கள் கவலைப்பட வேண்டும்' என்றார் அமைச்சர். 
அண்மையில் தில்லி மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (சிஎஸ்இ) ஆய்வு நடத்தியது. அதில், கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, நிகழாண்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையில் 32 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது.
ஒரு தடவை பயணத்திற்கு அரை யுஎஸ் டாலருக்கும் குறைவாக கட்டணம் வசூலிக்கப்படும் மெட்ரோ நகரங்களில் சிறந்த வகையில் வாங்கக்கூடிய விலையில் ரயில் கட்டண சேவையை அளிக்கும் இரண்டாவது நகரமாக தில்லி உருவெடுத்துள்ளது. அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு அறிக்கை குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், சாமானிய மனிதர்களுக்கு எட்டாத நிலையில் மெட்ரோ போக்குவரத்து இருப்பது மிகவும் கவலை தரும் செய்தியாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில்அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "தில்லி மெட்ரோவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சமாக இருந்தது. கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை 29 லட்சத்தைக் கடந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையானது, மெட்ரோ மூன்றாம் கட்டப் பணிகள் முடிவடைந்தால், பயணிகளின் எண்ணிக்கை 32 லட்சமாக அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இன்னும் பணிகள் முடிவடையவில்லை' என்றார்.
அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கையானது தவறாக திசைதிருப்புவதாக உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) புதன்கிழமை தெரிவித்திருந்தது. அதில், தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் முடிந்து இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments