FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

32 மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் 14 ஆகக் குறைப்பு! மக்களுக்கு கூடுதல் சுமை

தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் 14 ஆகக் குறைக்கப்படும் திட்டத்தால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பது பற்றி..

25 ஆகஸ்ட் 2026, 12:04 pm IST
நுகர்வோர் ஆணையங்கள் - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் இருக்கும் 32 மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மதுரையுடன் இணைக்கப்பட்டு 14 ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை, 14 ஆணையங்களாக மறுசீரமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்ட ஆணையங்களை, அருகிலுள்ள மாவட்ட ஆணையங்களுடன் இணைத்து செயல்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பான நிலை அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் செயல்பாடுகளை அரசு ஆய்வு செய்தது.

இதில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், நிதிச்சுமை, மனிதவளம் மற்றும் பொதுமக்களின் அணுகல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், குறைந்த வழக்குகள் உள்ள மாவட்ட ஆணையங்களை அருகிலுள்ள ஆணையங்களுடன் இணைத்து, அவற்றின் அதிகார வரம்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை, மதுரை மாவட்ட ஆணையத்துடன் இணைக்க தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

இதன்படி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோர் வழக்குகள் மதுரை ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு மாவட்ட நுகர்வோர் ஆணையங்களையும் அருகிலுள்ள மாவட்டங்களுடன் இணைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தெற்கு, சென்னை வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஆணையங்கள் மட்டும் தனித்தனியாக தொடரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர்–செங்கல்பட்டு, வேலூர்–கிருஷ்ணகிரி, சேலம்–நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை–தஞ்சாவூர், கரூர்–திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில்–திருநெல்வேலி, தூத்துக்குடி–திருநெல்வேலி, விழுப்புரம்–திருவண்ணாமலை, கடலூர்–திருவண்ணாமலை, பெரம்பலூர்–திருவாரூர், அரியலூர்–திருவாரூர், நாகப்பட்டினம்–திருவாரூர் உள்ளிட்ட இணைப்புகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை, 14 ஆணையங்களாக குறைக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் 9 மாவட்ட ஆணையங்களும் திட்டத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அரசாணைகள் பிறப்பித்தல், அதிகார வரம்புகளை மாற்றுதல், பணியாளர்களை மறுநியமனம் செய்தல், வழக்கு ஆவணங்களை மாற்றுதல், உள்கட்டமைப்பு மற்றும் பட்ஜெட் தொடர்பான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்-II பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்-I பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாகவும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் 399 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆணையங்களிலும் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், சில இடங்களில் கூடுதல் பொறுப்பு அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது.

இந்த மாற்றத்தால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறையில் இடையூறு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை இணைப்பதற்கான அரசின் திட்டம் நிர்வாக ரீதியாக சில காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை சிக்கல்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

குறிப்பாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட வழக்குகள் மதுரையில் விசாரிக்கப்படும் பட்சத்தில், மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா?

கூடுதல் வழக்குகளை கையாளும் அளவுக்கு மதுரை ஆணையத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் உள்ளதா? 100 கிலோமீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ராமகிருஷ்ணன்

இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலரும் நுகர்வோர் சேவையாளருமான ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை ஒருங்கிணைத்து, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு ஆணையம் என்ற அடிப்படையில் அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கிளையே சென்னைக்கு வரவிருக்கும் நிலையில், உயர்நீதிமன்ற கிளையும் மதுரையில் செயல்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் அணுகலை எளிதாக்கும் வகையில் நீதிமன்ற அமைப்புகள் செயல்படும் சூழலில், மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை நீண்ட தொலைவில் உள்ள மற்றொரு மாவட்டத்துடன் இணைப்பது ஏற்றதாக இருக்காது என கூறினார்.

நுகர்வோர் சேவை குறைபாட்டால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான நீதியைப் பெறுவதற்காக மேலும் பணம் செலவழித்து, நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகக் கூடாது என தெரிவித்தார்.

summary

District Consumer Commissions Reduced to 14 Burden on the Public

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments