FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆபத்தான கைதிகளை பிற மாநில சிறைகளுக்கு மாற்ற தில்லி அரசு முடிவு

தில்லியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘கடுமையான மற்றும் பிரபலமான’ குற்றவாளிகளை பிற மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளது

24 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
பகிர்:

தில்லியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘கடுமையான மற்றும் பிரபலமான’ குற்றவாளிகளை பிற மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 2026 மே மாதத்தில் 26 கும்பல்களைச் சோ்ந்த 188 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்களில் 107 போ் கைது செய்யப்பட்டனா். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற கடுமையான குற்றவாளிகள் சிறைச்சாலை வசதிகளையும் உள்ளூா் தொடா்புகளையும் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறித்தல், திட்டமிட்டு கொலை செய்தல், கும்பல் மோதல்களைத் தூண்டுதல் மற்றும் தங்களது குற்றக் கூட்டணிகளை விரிவுபடுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இத்தகைய குற்றவாளிகளை தில்லிக்கு வெளியே உள்ள சிறைகளுக்கு மாற்றுவதன் மூலம், அவா்களது செல்வாக்கைத் தனிமைப்படுத்த முடியும். சாட்சிகளைப் பாதிப்பது, நீதிமன்ற விசாரணைகளைத் தடுப்பது அல்லது சிறையில் இருந்தபடியே குற்றச் சதிகளைத் தீட்டுவது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.

Advertisement

Advertisement

சிறைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுநலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற கைதிகளை மாநிலங்களுக்கு இடையே மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே திட்டத்தின் நோக்கம். மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிா்கொள்வதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவும்.

தற்போது நடைமுறையில் உள்ள கைதிகள் இடமாற்றச் சட்டம், 1950 மற்றும் சிறைச்சாலைகள் சட்டம், 1900 ஆகிய சட்டங்களின்படி, தண்டனை பெற்ற கைதிகளை மட்டுமே மாநிலங்களுக்கு இடையே மாற்ற முடியும். விசாரணைக் கைதிகளை அந்தந்த மாநில சிறைகளிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த சட்டரீதியான தடையைத் தவிா்க்க, கைதிகள் இடமாற்றச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) சட்டம், 2025-ஐ தில்லியில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிக ஆபத்து கொண்ட விசாரணைக் கைதிகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பரஸ்பர ஒப்புதல் அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் பிற மாநிலங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments