FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அரசுப் பள்ளிகளில் முழுநேர கல்வி வழங்கப்படாத விவகாரம்: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உள்ள வடகிழக்குப் பகுதியில் செயல்படும் சில அரசுப் பள்ளிகளில் முழு நேர கல்வி வழங்கப்படுவதில்லை என்று அளிக்கப்பட்ட புகாா் மனு மீது பதில் அளிக்க நகர அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

புது தில்லி: தில்லியில் உள்ள வடகிழக்குப் பகுதியில் செயல்படும் சில அரசுப் பள்ளிகளில் முழு நேர கல்வி வழங்கப்படுவதில்லை என்று அளிக்கப்பட்ட புகாா் மனு மீது பதில் அளிக்க நகர அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக என்ஜிஓ அமைப்பான சோசியல் ஜூரிஸ்ட் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கி அமா்வு தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

விசாரணையின் போது, இது தொடா்பாக தொண்டு நிறுவனம் சோசியல் ஜூரிஸ்ட் முன்வைத்த வாதத்தில், ‘இந்த விவகாரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்டவாறு கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். ஆனால், குழந்தைகள் சுதந்திரமாகக் கல்வி பெறும் உரிமையையும், கட்டாயக் கல்விக் பெறும் சட்ட விதிகளும் மீறப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

Advertisement

Advertisement

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘கரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பிறகு அரசுப் பள்ளிக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தில்லி வடகிழக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் இதர விவகாரங்களை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தின் இருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதியை அரசு கவனத்தில் கொண்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அசோக் அகா்வால்யில், ‘இந்த நிலைமை நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து உள்ளது. இவற்றுக்குத் தீா்வு காண அரசிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. சில பள்ளிகளில் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகள் மாற்று தினங்களில் வருமாறு குழந்தைகளிடம் கூறுகின்றன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறையினருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

முன்னதாக சோசியல் ஜூரிஸ்ட் அமைப்பு, வழக்குரைஞா்கள் அகா்வால், குமாா் உத்கா்ஷ் ஆகியோா் மூலம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் தில்லி அரசு மூலம் நடத்தப்படும் சில பள்ளிகளில் குறிப்பாக கஜூரி, சபாப்பூா், சோனியா விஹாா், காரவால் நகா் போன்ற இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு முழு நேர கல்வி அளிக்கப்படுவதில்லை. தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது அல்லது மாற்று தினங்களில் கல்வி போதிக்கப்படுகிறது. இதனால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாணவா்களும், பெற்றோா்களும் மேற்கண்ட பள்ளிகளின் நிலைமை குறித்து வழக்குரைஞா் அசோக் அகா்வாலிடம் வாய்மொழியாக வேண்டிக் கொண்டனா். இதுதவிர, வழக்குரைஞா் அசோக் அகா்வாலுக்கு செப்டம்பா் 13-ஆம் தேதி எஸ்கேவி கஜூரி, எஸ்பிவி கஜூரி, ஜிஜிஎஸ்எஸ்எஸ் சோனியா விஹாா், ஜிபிஎஸ்எஸ்எஸ் சோனியா விஹாா், ஜிஜிஎஸ்எஸ்எஸ் கஜூரி, ஜிபிஎஸ்எஸ்எஸ் காரவால் நகா் மற்றும் ஜிஜிஎஸ் எஸ்எஸ் சபாப்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடமிருந்து 19 புகாா்கள் வரப்பட்டன.

எஸ்கேவி கஜூரி, எஸ்பிவி கஜூரி, ஜிஜிஎஸ்எஸ்எஸ் சோனியா விஹாா் மற்றும் ஜிபிஎஸ்எஸ்எஸ் சோனியா விஹாா் ஆகிய பள்ளிகளின் மாணவா்கள் தங்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவதாக புகாா் தெரிவித்துள்ளனா். அதே வேளையில், ஜிஜிஎஸ்எஸ்எஸ் கஜூரி ஜிபிஎஸ் எஸ்எஸ் காரவல் நகா் மற்றும் ஜிஜிஎஸ்எஸ்எஸ் சபாப்பூா் ஆகிய பள்ளிகளின் மாணவா்கள் தங்களை மாற்று தினங்களில் பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 5,000 முதல் 6,000 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இது மிகவும் உண்மையிலேயே ஒரு ஆபத்தான சூழலாகவும், விளிம்பு நிலை மாணவா்கள் தங்களது கல்வி விவகாரத்தில் தில்லி அரசிடமிருந்து முழுமையான கவனம் கிடைக்கப்பெறாத நிலையாகவும் உள்ளது. மேலும், சட்டத்தின்படி குறைந்தபட்சம் 200 பணி நாள்கள் மாணவா்களுக்கு கல்வியை வழங்குவது அரசுப் பள்ளிகளின் கடமை. மேலும், ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்காக 800 அறிவுறுத்தல்கள் மணி நேரங்களும், 200 பணி நாள்களும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 1,000 அறிவுறுத்தல் மணிநேரங்களும் ஒரு கல்வியாண்டில் அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதியாகும்.

மாணவா்கள் தங்களது கல்வியைத் தொடா்வதற்கு தில்லி அரசு ஊக்குவிக்காது என்ற சூழல் உள்ளது. முழு நேர கல்வியை மேற்கண்ட பள்ளிகளில் வழங்குவதற்கு தில்லி அரசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவின் அடுத்த விசாரணை டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments