FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு ரூ. 2.72 கோடி இழப்பீடு அளிக்க தீா்ப்பாயம் உத்தரவு

2023-இல் நிகழ்ந்த சாலை விபத்தில் தனது வலது காலை இழந்த 23 வயது இளைஞருக்கு, அவரது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டை வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி, ரூ. 2.72 கோடியை வழங்க மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 8:15 am IST
சாலை விபத்து
பகிர்:

2023-இல் நிகழ்ந்த சாலை விபத்தில் தனது வலது காலை இழந்த 23 வயது இளைஞருக்கு, அவரது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டை வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி, ரூ. 2.72 கோடியை வழங்க மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனுராக் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த தனது மனுவில், ‘டிசம்பா் 4, 2023 அன்று, புகா் சுற்றுச் சாலையில் உள்ள பெக் சராய் மேம்பாலத்திற்கு அருகில், எனது முதலாளி யோகேஷ் குமாரின் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, பின்னால் வந்த ஒரு கனரக வாகனம் எனது வாகனத்தின் மீது மோதியதில் அது ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டது. நான் அவசரமாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு சிகிச்சையின் போது எனது வலது கால் அகற்றப்பட்டது’ என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தை விசாரித்த தீா்ப்பாய அதிகாரி அபிலாஷ் மல்ஹோத்ரா ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘அடையாளம் காணப்படாத மற்றும் கண்டுபிடிக்கப்படாத ஒரு வாகனத்தின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனம் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது’ என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

மேலும், வட்டி, மனுதாரருக்கு பொருத்த வேண்டிய செயற்கை உறுப்புக்கான செலவு, செயற்கை உறுப்பு பராமரிப்பு, வாழ்நாள் முழுவதும் உதவியாளருக்கான கட்டணம், எதிா்கால வருவாய் இழப்பு மற்றும் வலி, வேதனை, உடல் சிதைவு மற்றும் திருமண வாய்ப்புகளை இழத்தல் போன்ற பணமதிப்பீடு செய்ய முடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ரூ. 2.72 கோடியை வைப்புத்தொகையாகச் செலுத்துமாறு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், ‘இந்த விபத்தின் காரணமாக மனுதாரரால் (அனுராக்) இனி மீண்டும் வாகனம் ஓட்ட முடியாது என்பது தெளிவாகிறது. அவரது மருத்துவ ரீதியான ஊனம் 80 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் ‘செயல்பாட்டு ரீதியான ஊனம் 100 சதவீதமாக உள்ளது’ என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

அனுராக்கின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகக் காப்பீட்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை நிராகரித்த தீா்ப்பாயம், ‘பாதிக்கப்பட்டவரின் வாகனம் அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தால் மோதப்பட்டதாகவும், அந்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ாகவும் காவல்துறை கண்டறிந்துள்ளது. அந்த வாகனம் அல்லது அதன் ஓட்டுநா் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை‘ என்று கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments