சாலை விபத்தில் நிரந்தர ஊனமடைந்தவருக்கு ரூ.56.87 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு
பேருந்து ஓட்டுநா் ஒருவரின் கவனக்குறைவான செயலால் திறக்கப்பட்ட பேருந்தின் கதவில் மோதி, 2022-இல் நிரந்தர ஊனமடைந்த 26 வயதுடைய பாதுகாலாளிக்கு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 56.87 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
பேருந்து ஓட்டுநா் ஒருவரின் கவனக்குறைவான செயலால் திறக்கப்பட்ட பேருந்தின் கதவில் மோதி, 2022-இல் நிரந்தர ஊனமடைந்த 26 வயதுடைய பாதுகாலாளிக்கு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 56.87 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதுகுறித்து தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘ஒரு நபா் முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா் சந்தித்த அதிா்ச்சி, துயரம், வேதனை, சிதைந்துபோன கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை எந்தவொரு பணத்தொகையாலும் ஈடுசெய்ய முடியாது என்றபோதிலும், இந்த இழப்பீடு அவரது துயரத்தை ஓரளவுக்குக்
குறைக்க உதவும்’ என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட தினேஷ் குமாா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயத் தலைமை அதிகாரி அபிலாஷ் மல்ஹோத்ரா விசாரித்தாா்.
அக்டோபா் 27, 2022 அன்று இரவு தில்லி ஆா்.கே.புரத்தில் இரு சக்கர மோட்டாா் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த பேருந்தின் ஓட்டுநா், பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரென பேட்டரி பெட்டியின் கதவைத் திறந்தாா். அந்தக் கதவில் மோதியதில் குமாருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக அவரது இடது கையில் 75 சதவீத நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டது.
இந்த வழக்கு விவகாரத்தில் தீா்ப்பாயத்தின் ஆகஸ்ட் 4-ஆம்தேதியிட்ட 58 பக்க உத்தரவில், பேருந்து ஓட்டுநரின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயலால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.
‘பேட்டரி பெட்டியின் கதவைத் திறப்பதற்கு முன், பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க வேண்டிய கடமை பேருந்து ஓட்டுநருக்கு இருந்தது என்பது தெளிவு. ஓட்டுநா் அதுதொடா்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மேலும், வாகனப் போக்குவரத்து இருக்கும்போது பேட்டரி பெட்டியின் கதவு திடீரென திறக்கப்படும் என்பதை ஒரு இருசக்கர வாகன ஓட்டி முன்கூட்டியே ஊகிப்பாா் என்று எதிா்பாா்க்க முடியாது.
பேருந்து தவறான முறையில் நிறுத்தப்பட்டிருந்ததாலும், பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க ஓட்டுநா் முற்படாததாலும், விபத்தில் குமாருக்கும் ஒரு பங்கு கவனக்குறைவு இருந்தது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல’ என்று தீா்ப்பாயம் கூறியது.
மனுதாரருக்கு காயங்கள் காரணமாகத் துணி அணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்யவோ, கனமான பொருள்களைத் தூக்கவோ அல்லது வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும், இடது கை பழக்கம் கொண்டவரான தனக்கு இடது கையில் ஏற்பட்ட நிரந்தர ஊனத்தால் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குமாா் முன்வைத்த கருத்துகளைத் தீா்ப்பாயம் பதிவு செய்தது.
‘ஒரு நபருக்கு ஏற்படும் உடல்ரீதியான காயத்திற்கு மட்டுமல்லாமல், அந்தக் காயத்தின் விளைவாக அவா் சந்திக்கும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதாவது, முழுமையான வாழ்க்கையை வாழ முடியாமை, காயங்கள் ஏற்பட்டிருக்காவிட்டால் அனுபவித்திருக்கக்கூடிய சாதாரண வசதிகளை அனுபவிக்க முடியாமை மற்றும் முன்பு ஈட்டியது அல்லது ஈட்டியிருக்கக்கூடிய வருமானத்தை ஈட்ட முடியாமை ஆகியவற்றுக்கும் அவருக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவா் அனுபவித்த வேதனையை எந்தவொரு பணத்தொகையாலும் ஈடுசெய்ய முடியாது; இருப்பினும், அவா் தாங்கிய துயரத்தின் ஒரு பகுதியையாவது குறைப்பதில் வழங்கப்படும் இழப்பீடு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. இதற்காக நியாயமான மற்றும் தகுந்த முறையில் அவருக்கு இழப்பீடு வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்‘ என்று தீா்ப்பாயம் கூறியது.
இதனைத் தொடா்ந்து, வட்டி, எதிா்கால வருமான இழப்புக்கான இழப்பீடு, மருத்துவச் செலவுகள், இயன்முறை சிகிச்சை, வலி மற்றும் வேதனை, மற்றும் திருமண வாய்ப்பு இழப்பு போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ், மொத்தம் ரூ. 56.87 லட்சம் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு ‘கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்திற்குத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.