முகப்பு
புதுதில்லி

தில்லியில் வறுமை, வேலையின்மை விகிதம் குறைவு: டிஎஸ்ஐஎஃப் அறிக்கையில் தகவல்

தில்லியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுடன், வேலையின்மை விகிதமும் கணிசமாகச் சரிந்துள்ளதாக மாநில குறியீட்டு கட்டமைப்பு 2025 அறிக்கை தெரிவிக்கிறது.

Updated On : 9 ஜூலை 2026, 12:31 am IST
வேலையின்மை குறைவு - சித்திரிப்பு
பகிர்:

தில்லியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுடன், வேலையின்மை விகிதமும் கணிசமாகச் சரிந்துள்ளதாக மாநில குறியீட்டு கட்டமைப்பு 2025 அறிக்கை தெரிவிக்கிறது.

மாநில பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்ட இந்த அறிக்கையில் கூறியதாவது: ‘வறுமையற்ற உலகம்’ என்ற நிலையான வளா்ச்சி இலக்கின் அடிப்படையில், 2015-16-ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த வறுமையில் வாழும் மக்களின் விகிதம், 2017-18-இல் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதனுடன், ‘இடா்பாடுகளில் உள்ள பெண்கள்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. 2015-16-இல் 1,68,977 பேராக இருந்த இந்த எண்ணிக்கை, 2017-18-இல் 1,97,863, 2019-20-இல் 2,38,706, 2021-22-இல் 3,12,272-ஆக அதிகரித்ததுடன், 2024-25-ஆம் ஆண்டில் 3,97,465-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

ஐ.நா.அமைப்பின் ‘2030 நிலையான வளா்ச்சி திட்டம்’ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, பாலின சமநிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிறப்பு பாலின விகிதம் (ஆண் 1,000 பிறப்புக்கு பெண் குழந்தைகள் எண்ணிக்கை) 2015-இல் 898-ஆக இருந்தது 2017-இல் 913, 2019-இல் 920, 2022-இல் 929-ஆக உயா்ந்து, 2024-இல் 920-ஆக பதிவாகியுள்ளது.

மேலும், பெண்களின் தொழிலாளா் பங்கேற்பு விகிதமும் உயா்வு கண்டுள்ளது. 2017-18-இல் 11.2 சதவீதமாக இருந்த இது, 2018-19-இல் 13.7 சதவீதமாகவும், 2023-24-இல் 14.5 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

வேலையின்மை விகிதம் 2017-18-இல் 9.7 சதவீதமாக இருந்த நிலையில், 2019-20-இல் 8.7 சதவீதமாகவும், 2021-22-இல் 5.3 சதவீதமாகவும் குறைந்து, 2023-24-இல் 2.1 சதவீதமாக சரிந்துள்ளது. இதேபோல், 15 முதல் 59 வயதுக்குட்பட்டோரின் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் 2017-18-இல் 49.9 சதவீதமாக இருந்தது, 2023-24-இல் 51.5 சதவீதமாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த முன்னேற்றங்கள், தில்லியில் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சி திசைசாா்ந்து முன்னேறி வருவதை வெளிப்படுத்துவதோடு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடையும் முயற்சிகளில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments