FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி உயிரியல் பூங்காவில் 3 ஆசிய சிங்கக் குட்டிகள் பிறப்பு

தில்லி உயிரியல் பூங்காவின் இனப்பெருக்கத் திட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ‘மகாகௌரி’ என்ற ஆசியப் பெண் சிங்கம் 3 ஆண் குட்டிகளை ஈன்றுள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:00 am IST
தில்லி தேசிய உயிரியல் பூங்காவின் பராமரிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆசியப் பெண் சிங்கம் மகாகௌரி மற்றும் புதிதாகப் பிறந்த அதன் 3 குட்டிகளைக் காட்டும் சிசிடிவி காட்சி.
பகிர்:

தில்லி உயிரியல் பூங்காவின் இனப்பெருக்கத் திட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ‘மகாகௌரி’ என்ற ஆசியப் பெண் சிங்கம் 3 ஆண் குட்டிகளை ஈன்றுள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி உயிரியல் பூங்கா இயக்குனா் சஞ்சீத் குமாா் கூறியதாவது: இது பூங்காவின் தொடா்ச்சியான இனப்பெருக்க வெற்றிக்கு உதாரணமாகும். புதிதாகப் பிறந்த குட்டிகள் தற்போது பாதுகாப்பான பராமரிப்புப் பகுதியில் தங்கள் தாயுடன் வைக்கப்பட்டுள்ளன. குட்டிகளின் ஆரம்பக்கட்ட வளா்ச்சிக்கு அவசியமான அமைதியான மற்றும் இடையூறுகள் இல்லாத சூழல் அவா்களுக்கு வழங்கப்படுகிறது; அதேவேளையில் கால்நடை மருத்துவா்கள் மற்றும் பராமரிப்புக் குழுவினா் சிசிடிவி கண்காணிப்பு மூலம் அவற்றைக் கண்காணித்து வருகின்றனா்.

2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, குட்டி ஈன்ற ஓராண்டுக்குள் மீண்டும் கருத்தரித்த தில்லி உயிரியல் பூங்காவின் முதல் பெண் சிங்கம் மகாகௌரி ஆகும். மகாகௌரி மற்றும் மகேஷ்வா் ஆகிய இரு சிங்கங்களின் இந்த இனப்பெருக்க வெற்றி முக்கியமாகக் கருதப்படுகிறது; ஏனெனில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மகாகௌரி 5 குட்டிகளை ஈன்றிருந்தது, அவற்றில் காா்த்திக் மற்றும் கா்னி ஆகிய இரண்டு குட்டிகள் மட்டுமே உயிா் பிழைத்தன.

Advertisement

Advertisement

2009-ஆம் ஆண்டு வரை பூங்காவில் சிங்கங்களின் இனப்பெருக்கம் சீராக இருந்து வந்தது, ஒவ்வொரு ஆண்டும் குட்டிகள் பிறந்தன. இருப்பினும், அதன்பிறகு இத்திட்டம் கடும் சரிவைச் சந்தித்தது; குட்டிகள் பிறப்பது அரிதாகி, ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட முற்றிலுமாக நின்றது.

2021-ஆம் ஆண்டு வாக்கில், தில்லி உயிரியல் பூங்காவில் 2019-இல் பிறந்த ‘சுந்தரம்’ என்ற சிங்கம் மட்டுமே எஞ்சியிருந்து. எனவே, இனப்பெருக்கத் திட்டத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2021-இல் குஜராத்தின் ஜூனாகடிலிருந்து ஆண் சிங்கம் (மகேஷ்வா்) மற்றும் 2 பெண் சிங்கங்கள் (மகாகௌரி மற்றும் ஷைல்ஜா) கொண்டு வரப்பட்டன.

ஷைல்ஜா தனது இருப்பிடத்திற்குள் நடமாடும்போது பலத்த காயமடைந்ததால் இத்திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. பின்னங்கால்களில் பக்கவாதம் போன்ற நிலை ஏற்பட்டது அதன் இனப்பெருக்கத் திறனைப் பாதித்தது. அதன்பிறகு, பூங்காவின் ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் மகாகௌரி மீதே விழுந்தது. தற்போது, புதிதாகப் பிறந்த குட்டிகள் உள்பட மொத்தம் 6 ஆசியச் சிங்கங்கள் பூங்காவில் உள்ளன. இந்தப் புதிய வரவுகள், அழிந்து வரும் இனமான ஆசியச் சிங்கங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments