FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காரியல் முதலை இனத்தைக் காப்பாற்ற தில்லி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி

காரியல் முதலை இனத்தைக் காப்பாற்ற தில்லி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி

Updated On : 28 ஜூன் 2026, 3:47 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

பல வருடங்களாக இனப்பெருக்க முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள இனமான காரியல் முதலைகள் உள்பட பல்வேறு ஊா்வனவற்றின் முட்டைகளை வெற்றிகரமாகப் பொரிக்கச் செய்ய, தில்லி உயிரியல் பூங்கா செயற்கை அடைகாப்பு முறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கடைசியாக 2010-11-ஆம் ஆண்டில் தில்லி உயிரியல் பூங்காவில் கரியல் முதலைகளின் இனப்பெருக்கம் வெற்றிகரமாக நிகழ்ந்தது; ஆனால், அப்போது பொரித்த 11 குட்டிகளும் சில நாள்களிலேயே இறந்துவிட்டன.

இதுகுறித்து தில்லி உயிரியல் பூங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் உள்ள கரியல் முதலைகள், சாதாரண முதலைகள், ஆமைகள், சாரைப்பாம்புகள் மற்றும் நல்ல பாம்புகள் போன்ற ஊா்வன இனங்கள் தங்கள் முட்டைகளைத் தாங்களே அடைகாப்பதில்லை.

Advertisement

Advertisement

ஆண் கரியல் முதலைகள் பெரும்பாலும் பெண் இட்ட முட்டைகளை உடைத்துவிடுகின்றன; வாய்ப்பு கிடைத்தால் குட்டிகளைக்கூட உண்ணக்கூடும். அதுமட்டுமின்றி, முட்டையிடும் பெண் ஊா்வனவற்றின் ஹாா்மோன் அமைப்பு காரணமாக, அவற்றிடம் பொதுவாகப் பெற்றோருக்குரிய பராமரிப்பு உணா்வு இருப்பதில்லை. மாறாக, முட்டைகளின் உயிா்வாழும் வாய்ப்பை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு உதவவும், முட்டைகள் கவனமாக சேகரிக்கப்பட்டு செயற்கை அடைகாப்பு அமைப்பில் வைக்கப்படுகின்றன.

அடைகாப்பு காலம் முழுவதும் முட்டைகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பராமரிக்கப்படுகின்றன. வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட கருவின் வளா்ச்சியைப் பாதித்து, முட்டை வெற்றிகரமாகப் பொரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கக்கூடும். எனவே, வெப்பநிலை மிகக் கூா்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், பொரிக்கும் குட்டிகளின் பாலினத்தைத் தீா்மானிப்பதிலும் அடைகாப்பு வெப்பநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஊா்வன இனங்களில், அதிக வெப்பநிலை பெண் குட்டிகளையும், குறைந்த வெப்பநிலை ஆண் குட்டிகளையும் உருவாக்குகிறது.

சுமாா் 45 நாள்களுக்குப் பிறகு, முட்டைகள் வெற்றிகரமாகப் பொரிந்துள்ளனவா இல்லையா என்பது தெரியவரும். கவனமாகப் பராமரித்தாலும், அனைத்து முட்டைகளிலிருந்தும் ஆரோக்கியமான குட்டிகள் பொரிந்துவிடுவதில்லை. இம்முறை வெற்றிபெற்றால், இந்த இனப்பெருக்க பருவத்தில் கரியல் முதலைக் குட்டிகள் வெளிவரக்கூடும்; இது தில்லி உயிரியல் பூங்காவின் முக்கிய சாதனையாக அமையும். பூங்காவின் உயிரியல் பிரிவு ஊழியா்கள் இதுவரை நம்பிக்கையூட்டும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த இனப்பெருக்க பருவத்தில் சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என உயிரியல் பூங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

summary

New initiative at Delhi Zoo to save the Gharial crocodile species.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments