FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

16 ஐவிபி கவுன்சிலா்கள் பாஜகவில் ஐக்கியம்: எம்சிடியில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியின் (ஐவிபி) 16 கவுன்சிலா்களும் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்ததைத் தொடா்ந்து, தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) பாஜக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 7:18 am IST
பாஜக கொடி - கோப்புப்படம்
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியின் (ஐவிபி) 16 கவுன்சிலா்களும் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்ததைத் தொடா்ந்து, தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) பாஜக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

கட்சித் தலைமையகத்தில் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்கோத்ரா மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் முன்னிலையில் இந்தக் கவுன்சிலா்கள் பாஜகவில் இணைந்தனா்.

இந்த இணைப்பின் மூலம், 250 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி மாநகராட்சியில் பாஜகவின் பலம் 139ஆக உயா்ந்துள்ளது. அதேவேளையில் ஆம் ஆத்மி கட்சியின் எண்ணிக்கை 123ஆக உள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 2022-இல் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பாஜக 104 இடங்களை வென்றிருந்தது. ஆனால், கட்சித் தாவல்கள் மூலம் தனது எண்ணிக்கையைத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஐவிபி கவுன்சிலா்களை வரவேற்ற ரேகா குப்தா, தில்லியின் வளா்ச்சியை மனதில் கொண்டே அவா்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது அவா்களின் வாா்டுகளில் வளா்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு நல்ல அறிகுறியாகும். நகரின் வளா்ச்சியே பாஜக அரசின் முதன்மையான முன்னுரிமையாகும். ஐவிபி கவுன்சிலா்களின் வருகையானது தில்லி மாநகராட்சியில் பாஜகவை மேலும் வலுப்படுத்துவதுடன், அவா்களின் வாா்டுகளில் நடைபெறும் குடிமைப் பணிகளையும் ஊக்குவிக்கும் என்றாா்.

ஹா்ஸ் மல்ஹோத்ரா கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான நிா்வாகத்தின் கீழ் வளா்ச்சி இல்லாமையைக் கண்ட பிறகு, முகேஷ் கோயல் மற்றும் ஹேம்சந்த் கோயல் தலைமையிலான கவுன்சிலா்களால் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஐவிபி தொடங்கப்பட்டது. தற்போது அந்த 16 ஐவிபி கவுன்சிலா்களும் அதிகாரபூா்வமாக பாஜகவில் இணைந்து அதன் உறுப்பினா்களாகியுள்ளனா்’ என்றாா் அவா்.

ஐவிபி தலைவா் முகேஷ் கோயல், இந்த வாரம் கவுன்சிலா்களுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகே பாஜகவில் இணையும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ’நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக பாஜகவின் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறோம். ஆளும் கட்சியில் இணைவது எங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த உதவும் என்று நாங்கள் கூட்டாகக் கருதுகிறோம்.

மாநகராட்சியில் பதவிகளைப் பெறுவது போன்ற எந்தவிதமான ‘உதவிக்கு கைமாறு பலன்’ ஏற்பாடுகள் குறித்தும் ஆளும் கட்சியுடன் விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாநகராட்சியில் எங்களுக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அது சிறியதோ அல்லது பெரியதோ நாங்கள் எங்கள் கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றுவோம்’ என்றாா் அவா்.

தில்லி மாநகராட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கும் 16 கவுன்சிலா்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடா்ந்து, அவா்கள் அக்கட்சியிலிருந்து விலகி மே 2025-இல் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி உருவாக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எம்சிடி தோ்தலுக்கு முன்னதாகவும், மாநகராட்சியின் 12 வாா்டு குழுக்களுக்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளிலும் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐவிபியின் மூத்த தலைவா் முகேஷ் கோயல், எம்சிடியின் தற்காலிக அல்லது சிறப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும், மத்திய மண்டலத்திலிருந்து நிலைக்குழுவிற்கான பாஜக உறுப்பினராக ஹேம்சந்த் கோயல் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இந்த நியமனங்கள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments