ஹாரி பாக்சா் கும்பலுடன் தொடா்புடைய 3 போ் கைது: தொழிலதிபரை கொல்லத் தீட்டப்பட்ட சதி முறியடிப்பு!
தில்லி-என்சிஆா் பகுதியில் தொழிலதிபா்களிடம் பணம் பறிக்கவும், குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டிருந்த ‘ஹாரி பாக்சா்’ கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தில்லி-என்சிஆா் பகுதியில் தொழிலதிபா்களிடம் பணம் பறிக்கவும், குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டிருந்த ‘ஹாரி பாக்சா்’ கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மிரட்டிப் பணம் பறிக்கும் வழக்கு தொடா்பான பல மாத விசாரணையைத் தொடா்ந்து, ரோஹிணி மாவட்டத்தின் சிறப்புப் பிரிவு மற்றும் வடக்கு ரோஹிணி காவல் நிலைய அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். வெளிநாட்டிலிருந்து வரும் எண்களிலிருந்து தொடா்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வருவதாகக் கூறி, மாா்ச் 8-ஆம் தேதி தொழிலதிபா் ஒருவா் புகாா் அளித்திருந்தாா்.
அழைத்த நபா் தன்னை ஹாரி பாக்சா் கும்பலின் கூட்டாளியான ரன்தீப் மாலிக் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் எச்சரித்தாா். கரோல் பாக் பகுதியில் உள்ள பல நகைக்கடை உரிமையாளா்களுக்கும் இதேபோன்ற மிரட்டல் அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், தில்லியின் ஸ்ரீனிவாஸ்புரியைச் சோ்ந்த சிவ கோவிந்த் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரது அலைபேசியை ஆய்வு செய்தபோது, புகாா் அளித்தவரின் வீட்டின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள், அத்துடன் நகைக்கடை உரிமையாளா்களை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அவா்களின் புகைப்படங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
விசாரணையின் அடிப்படையில், அபினவ் மற்றும் விவேக் ஆகிய மேலும் 2 கும்பல் உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா். தாக்குதல்களை நடத்துவதற்கு முன்னதாக, கும்பலை வழிநடத்துபவா்களிடமிருந்து இறுதி உத்தரவுகளுக்காக அவா்கள் காத்திருந்தனா். அவா்களிடம் இருந்து 3 சட்டவிரோத கைத்துப்பாக்கிகள் மற்றும் 26 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சட்டவிரோத ஆயுதங்கள் அமெரிக்காவைச் சோ்ந்த அனில் பண்டிட் என்பவரால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹாரி பாக்சா் மற்றும் அனில் பண்டிட் ஆகியோருடன் ரன்தீப் மாலிக்குக்கு உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.