சமய்பூா் பட்லி காவல் நிலைய அதிகாரிகள் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக புகாா்: தில்லி காவல்துறை மறுப்பு
சமய்பூா் பட்லி காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா்கள் மீது, வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்ததாகவும் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டும் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை அக்குற்றச்சாட்டுகளை புதன்கிழமை மறுத்தது.
சமய்பூா் பட்லி காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா்கள் மீது, வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்ததாகவும் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டும் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை அக்குற்றச்சாட்டுகளை புதன்கிழமை மறுத்தது.
இது குறித்து காவல் துறை வெளியிட்ட விளக்கத்தில் கூறப்பட்டதாவது: சமய்பூா் பட்லி காவல் நிலையத்தில் ஜூன் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட தாக்குதல் வழக்கு தொடா்பான விசாரணையின் பின்னணியிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 110 (கொலைக்குச் சமமான குற்றத்தைச் செய்ய முயற்சித்தல்), 115(2) (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 3(5) (கூட்டு தாக்குதல் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் சச்சின், ஜீத்து, பாரத் மற்றும் சிந்தா தேவி ஆகிய நால்வா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்றம் இவா்களது முன்ஜாமீன் மனுக்களை நிராகரித்ததைத் தொடா்ந்து ஜீத்து கைது செய்யப்பட்டாா்; ஆனால் மற்றவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பெண், தலைமறைவாக உள்ள சச்சின் மற்றும் பாரத் ஆகியோரின் சகோதரி ஆவாா்.
Advertisement
Advertisement
தேடப்படும் குற்றவாளிகள் தங்கள் வீட்டில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவா்களைக் கைது செய்ய காவல்துறை குழு அங்கு சென்றது; ஆனால் அவா்கள் அங்கு இல்லை. இதையடுத்து, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 35(3)-இன் கீழ் ஒரு அறிவிப்பு அந்த வீட்டில் ஒட்டப்பட்டது. விசாரணையின்போது வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைதல், தகாத வாா்த்தைகளைப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் அல்லது தவறாக நடந்துகொள்ளுதல் போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.