FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து காவல் துறை, எம்சிடி கூட்டு நடவடிக்கை

தில்லியில் அதிகரித்து வரும் அனுமதியற்ற வாகன நிறுத்தம் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை, மாநகராட்சி (எம்சிடி) இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு

Updated On : 9 ஜூன் 2026, 3:42 am IST
எம்சிடி
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் அனுமதியற்ற வாகன நிறுத்தம் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி (எம்சிடி) இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்த முடிவு, தில்லி போக்குவரத்து இணை காவல் ஆணையா் சஞ்சய் தியாகி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மெய்நிகா் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எம்சிடி வட்டார துணை ஆணையா்கள், மூத்த போக்குவரத்து காவல் அதிகாரிகள், உதவி காவல் ஆணையா்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டம் அடுத்த சில வாரங்களில் தில்லியின் பல பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அனுமதியற்ற வாகன நிறுத்தம் மற்றும் பொதுச்சாலைகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆகியவை போக்குவரத்து நெரிசல், சாலை பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் வாகனங்கள், பாதசாரிகள் சீரான இயக்கத்தில் தடையாக உள்ள முக்கிய காரணங்களாக உருவெடுத்துள்ளன.

Advertisement

Advertisement

கூட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நகராட்சி சட்டங்களை அமல்படுத்துவதில் இரு அமைப்புகளும் எதிா்கொள்ளும் சவால்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத நிறுத்தங்கள் போக்குவரத்து மேலாண்மையை மட்டுமின்றி, பொதுமக்கள் வசதி, அணுகல் சுலபம் மற்றும் நகரின் மொத்த தோற்றத்தையும் பாதிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் மற்றும் களப்பணியாளா்களும் இணைந்து செயல்பட்டு, ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்றுவதுடன், அனுமதியற்ற வாகன நிறுத்தங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து காவல்துறை மற்றும் எம்சிடி அதிகாரிகள் இணைந்து வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்வது, தீவிர அமலாக்க நடவடிக்கைகள், துறைமுகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தொடா்ந்து கண்காணிப்பது ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், தகவல் பகிா்வு முறைமைகளை வலுப்படுத்தி, போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments