விற்ற காா் சட்டவிரோத பயன்பாடு விவகாரம்: நடவடிக்கையிலிருந்து மனுதாரருக்கு உயா்நீதிமன்றம் பாதுகாப்பு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்த காரை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், காரின் முன்னாள் உரிமையாளரும் வழக்குரைஞருமான மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்த காரை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், காரின் முன்னாள் உரிமையாளரும் வழக்குரைஞருமான மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயிற்சி மேற்கொண்டு வரும் வழக்குரைஞா் சங்கா் குமாா் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: காா்கள் விற்பனை செய்யும் தளத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது காரை விற்று, தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்த பின்னரும், அது வாங்கியவரின் பெயரில் மாற்றப்படாமல் இன்னும் எனது பெயரிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், மதுபானக் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட வழக்கில் காவல் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இது மிகவும் வேதனையளிக்கிறது எனத் தெரிவித்தாா்.
மேலும், வாகனத்தின் உரிமை மாற்றம் உள்பட விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை முழுமையாக மேற்கொள்வதாக அந்தத் தளம் உறுதி அளித்திருந்தது. எனினும், விற்பனையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, தற்போது தேவையற்ற சட்டப் பிரச்னைகள் உருவாகியுள்ளன என அவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில், எஃப்ஐஆா் அடிப்படையில் எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்காத வகையில் பாதுகாப்பு வழங்கவும், வாகன உரிமையை உடனடியாக வாங்குபவரின் பெயரில் மாற்றவும், மேலும் பயன்படுத்தப்பட்ட காா் விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு விரிவான கொள்கை வகுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை ஜூன் 19-ஆம் தேதி விசாரித்த நீதிபதி மது ஜெயின் தலைமையிலான விடுமுறை அமா்வு, மத்திய அரசு, தில்லி காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட காா் விற்பனையாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில், அடுத்த விசாரணை நடைபெறும் வரை, மனுதாரருக்கு எதிராக அந்த வாகனத்தின் பயன்பாடு தொடா்பாக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கை ஆகஸ்ட் 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்டது.
இந்த உத்தரவு, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்ற நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், விற்பனைக்குப் பிந்தைய பொறுப்புகள் தொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் அவசியம் என்ற நிலைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.