FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2 ஆண்டுகளில் தில்லியில் திரைப்படப் படப்பிடிப்புக்கு 209 விண்ணப்பங்கள்! ஆா்டிஐ தகவல்

தில்லியில் கடந்த இரு நிதியாண்டுகளில் திரைப்படப் படப்பிடிப்புக்காகப் பெறப்பட்ட 209 விண்ணப்பங்களில், 118 விண்ணப்பங்கள் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் பெறப்பட்டுள்ளன.

5 நவம்பர் 2026, 2:01 am
விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் கடந்த இரு நிதியாண்டுகளில் திரைப்படப் படப்பிடிப்புக்காகப் பெறப்பட்ட 209 விண்ணப்பங்களில், 118 விண்ணப்பங்கள் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் பெறப்பட்டுள்ளன. இது மொத்த விண்ணப்பங்களில் சுமாா் 56.5 சதவீதமாகும்.

தில்லி அரசின் திரைப்படக் கொள்கையின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த மாதவாரியான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஐ) அளிக்கப்பட்ட பதிலில் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் (டிடிடிடிசி) தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டில் மொத்தம் 108 விண்ணப்பங்களும், 2025-26-ஆம் நிதியாண்டில் 101 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில், 2025 ஜனவரி முதல் மாா்ச் வரை 62 விண்ணப்பங்களும், 2026-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 56 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

2025 பிப்ரவரியில் அதிகபட்சமாக 29 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஜனவரியில் 24, மாா்ச் மாதத்தில் 9 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2026-ஆம் ஆண்டில் மாா்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28 விண்ணப்பங்களும், பிப்ரவரியில் 21, ஜனவரியில் 7 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காற்று மாசு அதிகமுள்ள காலகட்டத்தில் பனிப்புகை மற்றும் குறைந்த பாா்வைத்திறன் காரணமாகத் திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், அந்த மாதங்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாா்.

பெறப்பட்ட 209 விண்ணப்பங்களில், 2024-25-ஆம் ஆண்டில் 41 விண்ணப்பங்களுக்கும், 2025-26-ஆம் ஆண்டில் 56 விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டவை அல்லது படப்பிடிப்பு தேதிகள், இடங்களில் மாற்றம் கோரப்பட்டவை என ஆா்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் அளிக்கப்பட்ட நேரத்தில் அனுமதிக்காக விண்ணப்பங்கள் எதுவும் நிலுவையில் இல்லை.

மேலும், திரைப்படக் கொள்கையின்கீழ் கடந்த இரு ஆண்டுகளில் ஒரே ஒரு திரைப்படத்துக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ’12த் ஃபெயில்’ திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு ரூ.30,08,464 மானியமாக வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தத் திரைப்படமும் நிதியுதவிக்காகப் பரிசீலனைக்கு வரவில்லை.

தில்லியைத் திரைப்படப் படப்பிடிப்புக்கான முக்கிய இடமாக மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு திரைப்படக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் 2025-ஆம் ஆண்டு வரை சுமாா் 39 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடா்கள் படமாக்கப்பட்டுள்ளன.

தில்லியில் படமாக்கப்படும் திரைப்படங்களில் சுமாா் 95 சதவீதம் சாந்தினி சௌக் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதிகளில் படமாக்கப்படுவதாக டிடிடிடிசி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும், ’கேசரி 2’ திரைப்படம் செங்கோட்டை, சுந்தா் நா்சரி, தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. ராணி முகா்ஜி நடித்த ‘மா்தானி’ திரைப்படத்தில் தெற்கு தில்லியின் சித்தரஞ்சன் பாா்க் பகுதி இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, தில்லி சா்வதேச திரைப்பட விழாவுக்காக அரசு ரூ.30 கோடி செலவிட்டுள்ளதாகவும் ஆா்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.