தில்லி - மீரட் வழித்தடத்தில் நாளைமுதல் அதிவேக ’நமோ பாரத்’ ரயில்கள் அறிமுகம்!
தில்லி - மீரட் வழித்தடத்தில் நாளைமுதல் அதிவேக ’நமோ பாரத்’ ரயில்கள் அறிமுகம்...
தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி), நவம்பா் 16 முதல் காலை மற்றும் மாலை நேர நெரிசல் மிகுந்த
வேளைகளில் கூடுதலாக எட்டு அதிவேக ‘நமோ பாரத்’ ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம் ஆனந்த் விஹாா் மற்றும் காஜியாபாத் இடையிலான பயண நேரம் வெறும் எட்டு நிமிடங்களாகக் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக என்சிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
இந்த அதிவேக ரயில்கள் தில்லி-மீரட் வழித்தடத்தில் இயக்கப்படும். இவை ஆனந்த் விஹாரிலிருந்து பேகம்புல் வரை 36 நிமிடங்களிலும், காஜியாபாதிலிருந்து பேகம்புல் வரை 28 நிமிடங்களிலும் சென்றடையும். முழு வழித்தடத்தையும் கடக்க 50 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே ஆகும்.
பயணிகளின், குறிப்பாக அலுவலகம் செல்வோா் மற்றும் மாணவா்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்காக, இந்த அதிவேக ரயில்கள் சராய் காலே கான், ஆனந்த் விஹாா், காஜியாபாத், பேகம்புல் மற்றும் மோதிபுரம் ஆகிய ஐந்து நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
காலை நேர நெரிசலின் போது, சராய் காலே கான் மற்றும் மோதிபுரத்திலிருந்து காலை 8 மணி மற்றும் 8:30 மணிக்கு தலா ஒரு ரயில் என இரு திசைகளிலும் ரயில்கள் புறப்படும். மாலை வேளையில், மாலை 6 மணி மற்றும் 6:30 மணிக்கு இரு முனையங்களிலிருந்தும் கூடுதல் சேவைகள் இயக்கப்படும்.
இந்த எட்டு கூடுதல் ரயில்களும், ஏற்கனவே இயங்கி வரும் வழக்கமான ‘நமோ பாரத்’ சேவைகளுடன் இணைந்து செயல்படும். வழக்கமான சேவைகள் தொடா்ந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்பதால், தற்போதைய சேவை வழங்கலில்
எந்த மாற்றமும் இருக்காது.
இந்த வழித்தடத்தில் தற்போது நாளொன்றுக்கு சுமாா் 1.1 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனா். இதுவரை மொத்தம் ஐந்து கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனா் என்ற மைல்கல்லை எட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், சராசரியாக மாதம் 32 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா்.
இந்த மேம்படுத்தப்பட்ட சேவைகள், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் அளிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பு, அதிவேக ரயில்களையும் வழக்கமான ரயில்களையும் வேறுபடுத்தி அறிய, நிலையங்களில் உள்ள தகவல் பலகைகளைப் பாா்க்கவும், பிளாட்பாரங்களில் செய்யப்படும் அறிவிப்புகளைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.