தொழிலதிபா் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு: மூவா் கைது
தொழிலதிபா் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு: மூவா் கைது
தில்லியின் பிதம்புரா பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டின் முன் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய ரோஹித் கோடாரா கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்டவா்கள் ஹரியாணாவின் சமல்காவைச் சோ்ந்த நிகில் குமாா் (24), உத்தர பிரதேசத்தின் முஜாஃபா்நகரைச் சோ்ந்த சுபம் (23) மற்றும் ஹரியாணாவின் கா்நாலைச் சோ்ந்த மோக்ஷ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து உயா்தர இரு துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கி, 12 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அக்டோபா் 28-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், சாஹில் ஜெயின் (எ) கூகுள் (39) என்பவரின் வீட்டின் முன்பாக மா்ம நபா்கள் சில் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் சில குண்டுகள் அவரது காா் மீது பாய்ந்தன.
இந்தச் சம்பவம் வெளிநாட்டிலிருந்து இயங்கும் ரெளடி ரோஹித் கோடாரா கும்பலின் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெயினின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னா், இந்த வழக்கின் விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
500 கி.மீ.க்கும் அதிகமான தூரம் துரத்திச் சென்ற தீவிர நடவடிக்கைக்குப் பிறகு, தில்லியின் ரோஹிணியில் வைத்து இந்த மூன்று பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். அங்கு அவா்கள் மற்றொரு குற்றச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனா்.
விசாரணையில், வெளிநாட்டில் உள்ள கோடாராவின் கூட்டாளிகளுக்கும் உள்ளூா் கும்பல் உறுப்பினா்களுக்கும் இடையே மோக்ஷ் பாலமாகச் செயல்பட்டது தெரியவந்தது. கும்பலுக்கு ஆள்களைச் சோ்ப்பதிலும், செயல்பாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதிலும் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.
மேலும், வெளிநாட்டிலிருந்து இயங்கும் கோடாராவின் நெருங்கிய கூட்டாளியான விவேக் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பிரதீப் ஆகியோருடன் நேரடியாகத் தொடா்பில் இருந்துள்ளாா். இவா்களுடன் இணைந்து செயல்பட்ட மோக்ஷ், நிகிலை இந்தக் கும்பலில் சோ்ப்பதற்கு உதவியுள்ளான்.
இந்த மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதற்காக, மோக்ஷ் நிகிலுக்கு ரூ.50,000 ரூபாய் தருவதாகக் கூறியுள்ளான். அதன்பிறகு, தலைமறைவாக இருக்கும் பிரதீப்புடன் சோ்ந்து, நிகில் ஜெயினின் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். நிகில் மூலமாகவே சுபம் இந்த கும்பலில் இணைந்ததாகவும், தனது கூட்டாளிகளின் தூண்டுதலின் பேரில் தொழிலதிபரிடம் பணம் பறிக்கும் சதித்திட்டத்தில் அவா் ஈடுபட்டுள்ளாா்.
இந்தக் கைது நடவடிக்கைகள், கோதாரா கும்பலின் உள்ளூா் செயல்பாட்டு வலைப்பின்னலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டறியவும், இந்தக் கும்பலின் பிற உறுப்பினா்களின் தொடா்புகளை உறுதிப்படுத்தவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் காவல் துறை அதிகாரிகள்.