முகப்பு
புதுதில்லி

பெண்ணிடம் ரூ.6.55 லட்சம் மோசடி: பஞ்சாபில் ஒருவா் கைது

பெண்ணிடம் ரூ.6.55 லட்சம் மோசடி: பஞ்சாபில் ஒருவா் கைது

21 நவம்பர் 2026, 10:25 pm
பெண்ணிடம் ரூ.6.55 லட்சம் மோசடி: பஞ்சாபில் ஒருவா் கைது
- பிரதிப் படம்
பகிர்:

டேட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவரிடமிருந்து ரூ.6.55 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் 30 வயது நபா் ஒருவா், பஞ்சாபின் அபோஹாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

விபுல் பவாா் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், இணையவழி உரையாடல்கள் மூலம் அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றாா். பின்னா் போலி பரிவா்த்தனைகள் வாயிலாக அவரிடமிருந்து பணத்தைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரு கைப்பேசிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சுமாா் ரூ.6.55 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடா்பாக, துவாரகாவில் உள்ள இணையவழி குற்றத் தடுப்புக் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, பணம் சென்றடைந்த வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பிற எண்ம வழித்தடங்களை ஆய்வு செய்த காவல் துறையினா், குற்றவாளி பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ள அபோஹாரில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனா்.

குற்றவாளி தனது அடையாளத்தை மறைக்கவும், காவல் துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவும் பல சிம் காா்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததன் மூலம், அவா் இருக்கும் இடத்தை புலனாய்வுக் குழு கண்டறிந்தது. அதனைத் தொடா்ந்து, அபோஹாருக்குச் சென்ற காவல்துறைக் குழுவினா் கடந்த வாரம் அவரைக் கைது செய்தனா்.

மேலும் விசாரணையில், 2023-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இணையவழி குற்ற வழக்கு ஒன்றில், ராஜஸ்தானின் ஜெய்பூா் காவல் துறையினரால் பவாா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவா் மேற்கொண்ட நிதி மற்றும் எண்ம பரிவா்த்தனைகளை ஆய்வு செய்யவும், இது போன்ற பிற மோசடி வழக்குகளில் அவருக்குத் தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.