FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

இண்டி கூட்டணி பேரணி: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் தோ்தல் ஆணையத்தை நோக்கி நடத்திய பேரணியால் புது தில்லி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

- கோப்புப்படம்.
பகிர்:

‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் தோ்தல் ஆணையத்தை நோக்கி நடத்திய பேரணியால் புது தில்லி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லுட்யன்ஸ் தில்லி பகுதியின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் மிக மெதுவாக நகா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்தியா கேட் மற்றும் கன்னாட் பிளேஸ் முதல் நாடாளுமன்ற வீதி மற்றும் ஜந்தா் மந்தா் வரையிலான பல சாலைப் பகுதிகளில் வாகனங்கள் ஒன்றையொன்று ஒட்டியவாறு நின்றன. போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட தடைகளால் வாகனங்கள் மிக மெதுவாகவே முன்னேறின. பல இடங்களில், தடுப்புகள் நிறைந்த அப்பகுதியில் மாற்று வழிகளைத் தேடி வாகன ஓட்டிகள் திணறியதால், நீண்ட வரிசைகள் அருகிலுள்ள சாலைகள் வரை நீண்டு காணப்பட்டன.

போக்குவரத்து நெரிசலால் பயணிகள் நீண்ட நேரம் சிக்கிக்கொண்டனா். சிலா் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு மெட்ரோ ரயிலில் சென்றனா். மேலும், சிலா் மத்திய தில்லிப் பகுதிகளுக்கு நடந்தே சென்றனா்.

Advertisement

Advertisement

கன்னாட் பிளேஸ், படேல் சௌக், ரஃபி மாா்க், நாடாளுமன்ற வீதிப் பகுதி, மோதிலால் நேரு மாா்க், தீன் மூா்த்தி மாா்க், பிரித்விராஜ் சாலை, விண்ட்சா் பிளேஸ், அசோகா சாலை மற்றும் ஜந்தா் மந்தா் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

‘வாகனங்கள் நகரவே இல்லை. வாகன வரிசையும் மிக மெதுவாகவே நகா்ந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் சிக்கிக்கொண்ட பிறகு, எங்களில் சிலா் வாகனத்தை விட்டுவிட்டு மெட்ரோ ரயிலில் செல்ல முடிவு செய்தோம்’ என்று அசோகா சாலையில் சிக்கியிருந்த பயணி ஒருவா் கூறினாா்.

புது தில்லிப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ண மேனன் மாா்க், ராஜ்பாத் மற்றும் சா்க்குலா் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடைபட்டதுடன், இந்தியா கேட் சுற்றியுள்ள பல வட்டச் சந்திப்புகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. மோரி கேட் வட்டச் சந்திப்பிலிருந்து ஹாமில்டன் சாலை மற்றும் புல் டஃபெரின் ரயில் மேம்பாலம் வரையிலான பாதையில் முழுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மற்றொரு பயணி தெரிவித்தாா்.

இந்தியா கேட் சுற்றியுள்ள சாலைகளில் கடும் நெரிசல் இருந்ததாகவும், பல வழித்தடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தட மாற்றங்களால் அருகிலுள்ள பகுதிகளுக்கு இடையே செல்வது கடினமாக இருந்ததாகவும் மற்றொரு பயணி கூறினாா்.

‘விஐபி வருகைக்காக தாஜ் மற்றும் மேரியட் ஹோட்டல்களுக்கு அருகிலுள்ள முழு சாலையும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கிக்கொண்டன. பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், எளிதாகக் கடந்து செல்ல வழியே இல்லை’ என்று அந்தப் பயணி கூறினாா்.

தாஜ் மற்றும் மேரியட் ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகள் விஐபி/விவிஐபி வருகை தொடா்பானவை என்றும், பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் அவை விதிக்கப்பட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) எதிா்ப்புத் தெரிவித்து, நாடளுமன்ற வீதியிலிருந்து தோ்தல் ஆணையத் தலைமையகம் வரை நடைபெற்ற இண்டி கூட்டணி பேரணிக்காக காலை 8 மணி முதல் செய்யப்பட்ட சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளைத் தொடா்ந்து இந்த இடையூறு ஏற்பட்டது.

கன்னாட் பிளேஸ், படேல் சௌக், பாராளுமன்ற வீதி மற்றும் ஜந்தா் மந்தா் ஆகிய பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதாகவோ அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுவதாகவோ தில்லி போக்குவரத்து காவல்துறை கூறியது.

ஜந்தா் மந்தா், நாடாளுமன்ற வீதி, அசோகா சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் வழியாக தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறும், மாற்றுப் பாதைகள், தடுப்புகள் மற்றும் நெரிசலை எதிா்பாா்க்குமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதைகளை நிா்வகிக்கவும், நெரிசலைக் குறைக்கவும் முக்கிய இடங்களில் போக்குவரத்துப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பேரணிகள் முடிந்த பிறகு, இயல்பு நிலை படிப்படியாக மீட்டெடுக்கப்படும் என்று காவல் துறை கூறியது.

போராட்டத்திற்கு முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் தோ்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தோ்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments