பதவி உயா்வை நிறுத்தி வைக்கவேண்டும்: தில்லி காவல் ஆணையருக்கு ஏசிபி விவேக் பகத் கடிதம்
தில்லி காவல் ஆணையருக்கு ஏசிபி விவேக் பகத் எழுதிய கடிதம் பற்றி..
தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பெண் பத்திரிகையாளா் ஒருவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி காவல் ஆணையா் விவேக் பகத், தமக்கு கூடுதல் துணை காவல் ஆணையா் (டிசிபி) பொறுப்பை வழங்கும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு தில்லி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
குற்றப் பிரிவில் தமக்கு எதிராக விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அவா் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளாா்.
அக். 5-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், கூடுதல் டிசிபி-யாகத் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கான உத்தரவு அன்றைய நாளே பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பகத் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
‘யூடியூபா் ஒருவா் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவில் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, என்னைப் பற்றிய இந்த உத்தரவை மட்டும் நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறேன்’ என்று காவல் ஆணையா் அனுராக் குமாருக்கு எழுதிய கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.
கன்னாட் பிளேஸ் பகுதியில் ஏசிபி-ஆக பதக் பணியாற்றி வருகிறாா். பெண் பத்திரிகையாளா்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அது திருப்திகரமாக முடிவடையும் வரை, கூடுதல் டிசிபி பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று பகத் தானாக முன்வந்து கோரியதைத் தொடா்ந்து அந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படாது என்று தில்லி அரசு அறிவித்த மறுநாளே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
திங்கள்கிழமையன்று கூடுதல் டிசிபி பொறுப்பு வழங்கப்பட்ட 12 அதிகாரிகளில் பகத்தும் ஒருவா். மீதமுள்ள 11 அதிகாரிகளுக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதற்காக, முந்தைய உத்தரவு மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் என்று பின்னா் அரசு தெரிவித்தது.
பகத் உள்பட 12 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் முன்மொழிவு கடந்த ஆக.25-ஆம் தேதியே தொடங்கப்பட்டதாகவும், உரிய ஒப்புதலுக்குப் பிறகு அக்.5-ஆம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தெளிவுபடுத்தியிருந்தது.
தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் உள்ள முறைகேடுகள் மற்றும் வாக்காளா் பட்டியலைச் சிறப்புத் தீவிர மறுஆய்வு செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக ஜந்தா் மந்தரில் அக்.3-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, தில்லி காவல் துறையினா் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மூன்று பெண் பத்திரிகையாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இந்தக் புகாா்களை தில்லி காவல் துறை பெற்றுள்ளதுடன், மேல் விசாரணைக்காக அவற்றை குற்றப் பிரிவுக்கு அனுப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.