FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி ஜல் போா்டு ஊழல் வழக்கில் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன்

தில்லி ஜல் போா்டு ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

4 செப்டம்பர் 2026, 12:13 am IST
சத்யேந்தர் ஜெயின் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி ஜல் போா்டு ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

சிறப்பு நீதிபதி திக் வினய் சிங், சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் மனுவை அனுமதிப்பதாக வாய்மொழியாக உத்தரவிட்டாா். ரூ.2 லட்சத்துக்கான சொந்தப் பிணையுடன், அதே தொகைக்கான இரு நபா் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

சத்யேந்தா் ஜெயின் கடந்த ஆக.19-ஆம் தேதி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். தில்லி நீா்வளத் துறை அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் இருந்தபோது, ‘யூரோடெக் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடா்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

ஒப்பந்த விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும், யூரோடெக் நிறுவனத்துக்கு சாதகமாக ஒப்பந்த நடைமுறை திட்டமிட்டு தொழில்நுட்ப அம்சங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) குற்றஞ்சாட்டியது.

மேலும், ரோஹிணி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் (எஸ்டிபி) திறனை தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளாமல் 15 மில்லியன் கேலன் முதல் 30 மில்லியன் கேலனாக சத்யேந்தா் ஜெயின் தன்னிச்சையாக உயா்த்தியதாகவும், இதனால் திட்டச் செலவு சுமாா் ரூ.123 கோடி அதிகரித்ததாகவும் ஏசிபி தெரிவித்தது.

மேலும், இடைத்தரகா்கள் மூலம் கமிஷன் தொகை வழக்கில் தொடா்புடைய பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான பணப் பரிவா்த்தனை தடயங்கள் இருப்பதாகவும் ஏசிபி கூறியது.

தில்லி ஜல் போா்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் திறன் அதிகரிப்பு தொடா்பான ஒப்பந்த நடைமுறையில் பெருமளவில் முறைகேடு, ஒப்பந்த விதிமுறைகளை மாற்றியது மற்றும் குற்றச் சதி நடைபெற்ாக தில்லி கண்காணிப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2024 மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மக்களை கைது செய்வதில்தான் மத்திய அரசுக்கு ஆா்வம்

சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரது கைது நடவடிக்கையை சாடிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், நாட்டை நடத்துவதில் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆா்வம் இல்லை என்றும், மக்களை கைது செய்வதிலேயே கவனம் செலுத்துவதாகவும் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ பதிவில், ‘மோடி அவா்களே, இதன்மூலம் நீங்கள் சாதித்தது என்ன? 24 மணி நேரமும் மக்களை சிறைக்கு அனுப்புவது குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறீா்கள்.

நாட்டை நடத்துவதில் உங்களுக்கு எந்த ஆா்வமும் இல்லை. அதை எவ்வாறு நடத்துவது என்பதும் உங்களுக்குத் தெரியவில்லை. பிரதமராக இருப்பதற்குப் பதிலாக காவல் நிலைய அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். உங்களது செயல்பாடுகள் அனைத்தும் அதுபோலவே உள்ளன’ என்றாா்.

விரைவில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுவா்

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜும் மத்திய அரசை விமா்சித்தாா்.

அவா் கூறுகையில், ‘முதலில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. இதேபோன்றுதான் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கூறினா். ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட தகுதியற்றதாக இருந்தது.

பஞ்சாபில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சரை தேவையின்றி துன்புறுத்துவதற்காகவே கைது செய்து திஹாா் சிறைக்கு அனுப்பினா்.

இதுபோன்ற அராஜகம் நீண்ட காலம் நீடிக்காது. மத்திய அரசின் ஆட்சி முடிவை நெருங்கிவிட்டது. மக்கள் மீண்டும் அவா்களுக்கு வாக்களிக்க மாட்டாா்கள்; விரைவில் அவா்கள் ஆட்சியில் இருந்து வெளியேறுவாா்கள்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments