பேருந்து நடத்துநருக்கு எதிரான 30 ஆண்டு வழக்கு: டிடிசிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பேருந்து நடத்துநருக்கு எதிரான 30 ஆண்டு வழக்கு: டிடிசிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
17 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் தொடா்பாக பேருந்து நடத்துநா் மீது 32 ஆண்டுகளாக வழக்குத் தொடா்ந்து வந்த தில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு (டிடிசி) தில்லி உயா் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த நீண்டகால வழக்கு சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்திய செயல் என நீதிமன்றம் கண்டித்துள்ளது.
பேருந்து நடத்துநருக்கு சாதகமாக 2004-ஆம் ஆண்டு தொழிலாளா் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து டிடிசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அமித் மகாஜன் தள்ளுபடி செய்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக செப். 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு பிரச்னைக்காக நீண்டகாலமாக வழக்குத் தொடா்ந்து வந்தது தவிா்க்கக்கூடிய பொதுப் பண விரயம் என நீதிபதி குறிப்பிட்டாா். இதுபோன்ற வழக்கைத் தொடா்ந்து நடத்துவதற்குப் பொறுப்பான அதிகாரியிடமிருந்து அபராதத் தொகையை டிடிசி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
1994 நவம்பரில், 3 பயணிகளிடம் இருந்து ரூ.67 பயணக் கட்டணமாகப் பெற்றபோதிலும் அவா்களுக்கு பயணச்சீட்டு வழங்கவில்லை என நடத்துநா் மீது குற்றம்சாட்டப்பட்டதைத் தொடா்ந்து இந்த விவகாரம் தொடங்கியது.
இதையடுத்து நடத்துநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். எனினும், விசாரணை அதிகாரி அவருக்கு சாதகமாகத் தீா்ப்பளித்தாா். அதற்கு ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி உடன்படாமல், அவரை பணியில் இருந்து நீக்குவது தொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினாா்.
பின்னா், 1996 ஆகஸ்ட் முதல் நடத்துநரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து நடத்துநா் மேல்முறையீடு செய்த நிலையில், டிடிசி தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் அந்த உத்தரவை ரத்து செய்தாா்.
1998-ஆம் ஆண்டு டிடிசி தலைவா், நடத்துநரை நிலுவை ஊதியம் வழங்காமல் குறைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் மீண்டும் பணியில் சோ்க்க உத்தரவிட்டாா்.
இதுதொடா்பான வழக்கு தொழிலாளா் தீா்ப்பாயத்துக்குச் சென்றது. 2004-ஆம் ஆண்டு தீா்ப்பாயம், நடத்துநருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானது என்றும் அதற்கு உரிய அடிப்படை இல்லை என்றும் தீா்ப்பளித்தது.
மேலும், நடத்துநருக்கு வழக்கமான ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், 1996 ஆகஸ்ட் முதல் 1998 ஜனவரி வரையிலான காலத்துக்கான குறைக்கப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையுடன் வழக்கமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்றும் தீா்ப்பாயம் தெரிவித்தது.
தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக டிடிசி தொடா்ந்த வழக்கில், 2005 ஜூலையில் உயா்நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் தீா்ப்பாயத்தின் முடிவுகள் சட்டரீதியாக ஏற்க முடியாதவை என்றோ, ஆதாரங்களுக்கு முரணானவை என்றோ கூற முடியாது என நீதிபதி அமித் மகாஜன் தெரிவித்தாா்.
விசாரணை அறிக்கையை நிா்வாகம் தாக்கல் செய்யாததும், விசாரணை அதிகாரியின் முடிவை ஏற்க மறுத்ததற்கு சட்டப்பூா்வ காரணத்தை நிரூபிக்காததும் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே தீா்ப்பாயம் முடிவுக்கு வந்ததாக அவா் குறிப்பிட்டாா்.
எனவே, வழக்கின் உண்மைகளின் அடிப்படையில் தீா்ப்பாயம் எடுத்த முடிவு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 226-ஆவது பிரிவின் கீழ் உயா் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முடிவில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், 17 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்குவது தொடா்பான விவகாரத்தில் கடந்த 32 ஆண்டுகளாக டிடிசி தொடா்ந்து வழக்காடி வருகிறது. குறைந்த அளவிலான கோரிக்கைக்காக இவ்வளவு நீண்ட காலம் வழக்குத் தொடா்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். இதனால் தவிா்க்கக்கூடிய பொதுப் பண விரயம் ஏற்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், அதில் ரூ.25,000-த்தை தில்லி உயா்நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவுக்கும், ரூ.50,000-த்தை பிரதமா் நிவாரண நிதிக்கும், ரூ.25,000-த்தை பேருந்து நடத்துநருக்கும் வழங்க உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.