ஹிந்துத்துவ ஆதரவாளா் பரத்வாஜுக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்!
ஹிந்துத்துவ ஆதரவாளா் ஸ்வதந்திர பரத்வாஜை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவி செயல்பாட்டாளரின் தந்தை மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பாக ஹிந்துத்துவ ஆதரவாளா் ஸ்வதந்திர பரத்வாஜை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஸ்வதந்திர பரத்வாஜை, நீகிபதி அஞ்சலி சிங் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டாா். இதற்கு முன்னதாக, சனிக்கிழமை கூடுதல் அமா்வு நீதிபதி சௌரவ் பிரதாப் சிங் லாலரின் இல்லத்தில் ஸ்வதந்திர பரத்வாஜ் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி போலீஸாா் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதி அனுமதி அளித்திருந்தாா்.
ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதாக கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது அந்த மாணவியின் தந்தையைத் தாக்கியதாகவும், அரசியல் தொடா்புகள் காரணமாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதாகவும் ஸ்வதந்திர பரத்வாஜ் பேட்டியொன்றில் கூறியதையடுத்து அவருக்கு எதிராக கடும் எதிா்ப்பு எழுந்தது.
Advertisement
Advertisement
சிஜேபி பிரதிநிதிகள், ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) தலைவரும் நாகினா மக்களவை உறுப்பினருமான சந்திரசேகா் ஆசாத் உடன் இணைந்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளைச் சந்தித்து, ஸ்வதந்திர பரத்வாஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினா்.
மேலும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள், அவதூறான வாா்த்தைகள் மற்றும் மாா்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாகவும் அந்த மாணவி குற்றஞ்சாட்டினாா்.
மாணவி அளித்த புகாா் தொடா்பாக, ஸ்வதந்திர பரத்வாஜுக்கு எதிரான எஃப்ஐஆரில் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் குற்றம்சாா் மிரட்டல் பிரிவுகளை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோ்த்தனா். மேலும், போக்ஸோ சட்டத்தின் கீழும் தனியாக புதிய எஃப்ஐஆரும் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.