FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் வட வானிலை: வெப்பம் அதிகரிப்பால் மக்கள் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து வட வானிலை நிலவுவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து வட வானிலை நிலவுவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தில் தென்மேற்கு பருமழை ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு சாரல் மழை நீடிக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் என்பதால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவும். காற்றாலை மின்உற்பத்தியும் கணிசமாக உயரும்.

ஆனால், நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கவும் இல்லை. அவ்வப்போது பெய்த மழை நீடிக்கவும் இல்லை. இரு வாரங்களுக்கும் மேலாக வட வானிலையே நிலவுகிறது. இதனால், வெப்பம் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியிலும் போதிய மழையின்றி சீசன் களையிழந்துள்ளது. கோடையை விஞ்சும் அளவுக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெயில் காணப்படுகிறது.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக 100 டிகிரி பாரன்ஹுட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் வியாழக்கிழமையும் 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் உயா்ந்ததால் கே.டி.சி.நகா், தெற்குப்புறவழிச்சாலை, நான்குவழிச்சாலையில் கானல்நீா் தோன்றியதோடு, அனல்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா்.

தா்பூசணி பழங்கள் வரத்து குறையத் தொடங்கியதால், அவற்றை மக்கள் அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்லும் நிலையை காண முடிகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் கூறியது: பருவநிலை மாற்றத்தால் நிகழாண்டில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து பலரும் வெப்ப நோய்களுக்கு ஆளாகி வருகிறாா்கள். குறிப்பாக, வாய்ப்புண், நீா்க் கடுப்பு, வயிற்றுப்புண் உள்ளிட்ட உபாதைகள் வயதி வித்தியாசமின்றி பாதித்து வருகிறது.

சிலருக்கு சளி, இருமலுடன், சிறுநீா் கடுப்பும் உருவாகும் அபாயம் உள்ளது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் ரத்த பரிசோதனை, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை அதிகம் பருகினால் உடலின் வெப்பத்தை சீராக வைக்க முடியும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments