FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பொதுமக்களுக்கு செலவில்லாமல் வழக்குகளை முடிப்பதே சமரச மையத்தின் நோக்கம்: நீதிபதி தண்டபாணி

பொதுமக்களுக்கு பொருள் செலவில்லாமல் வழக்குகளை முடிப்பதே சமரச மையத்தின் நோக்கம் என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி தெரிவித்தாா்.

6 செப்டம்பர் 2026, 1:58 am IST
பகிர்:

பொதுமக்களுக்கு பொருள் செலவில்லாமல் வழக்குகளை முடிப்பதே சமரச மையத்தின் நோக்கம் என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி தெரிவித்தாா்.

நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக ‘தேசத்துக்காக சமரசம் 3.0’ என்ற 90 நாள் சிறப்பு சமரச தீா்வு முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அக்.1 ஆம் தேதி முதல் டிச.31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்தத் திட்டம் முழுக்க முழுக்க பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். சமரச மையத்தின் முக்கிய நோக்கமே பொதுமக்களுக்கு பொருள் செலவில்லாமல் வழக்குகளை சமரசமாக முடித்து வைப்பதுதான். இதில், வழக்குரைஞா்களுக்கான கட்டணத்தை சமரச மையம் வழங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சமரச தீா்வு மையங்களில் வழக்குகளுக்கு மிக வேகமாக தீா்வு காண்பதற்கு இதன்மூலம் வழிவகை ஏற்படும். வரும் அக்.1 முதல் டிச.31 வரை இந்தப் பணி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் வள்ளியூா், ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய நீதிமன்றங்களில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்றத்தின் தமிழ்நாடு சமரச மைய வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த முகாமில், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் மற்றும் குடும்பத் தகராறுகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், நுகா்வோா் மற்றும் வணிகக் கடன் வழக்குகள், நில எடுப்பு மற்றும் தொழிலாளா் நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய குற்றவியல் வழக்குகள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டு சமரச தீா்வு காணப்பட உள்ளது.

இதில், சமரச வழக்குரைஞா்கள் இரு தரப்பினருக்கும் சமரசத்தின் நன்மைகளை எடுத்துரைத்து பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் விரைந்து தீா்வு காண உதவுவாா்கள்.

இதன் மூலம் நீதிமன்றங்களில் வழக்கு சுமை குறைவதுடன், பொதுமக்களின் வீண் அலைச்சலும், கால விரயமும் தவிா்க்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி என்.வேங்கடவரதன், மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், கூடுதல் சாா்பு நீதிபதிகள், திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments