FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரி மாவட்ட வனப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

குமரி மாவட்ட வனப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில்  தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

குமரி மாவட்ட வனப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில்  தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட காடுகள் மிகவும் தொன்மையானவை. மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் 30.2 சதம் காடுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு வனவிலங்குகள் சரணாலயமாக  அறிவிக்கப்பட்டுள்ள குமரி வனப்பகுதியின் ஓர் எல்லையில் களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயமும், மற்றோர் எல்லையில் நெய்யாறு வனவிலங்குகள் சரணாலயமும் உள்ளன. மேலும், புராதன சிறப்பு வாய்ந்த  மருந்துவாழ் மலையும் இங்குள்ளது.

இங்குள்ள மாறாமலை, பாலமோர், முத்துக்குளிவயல், சீ பீல்டு மற்றும் மகேந்திரகிரி மலை, காளிகேசம், கொடுத்துறை மலை, மேல் கோதையாறு ஆகியவை பச்சை பட்டாடை உடுத்தியதுபோல எப்போதும் மனதுக்கு இதமளிக்கும் சூழல் கொண்டவையாகும்.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி வனப் பகுதிக்குள் 48 காணி பழங்குடி குடியிருப்புகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தேக்கு, ஈட்டி, மருது, சந்தனம், அயினி, வேங்கை என 600-க்கும் அதிகமான மர வகைகள் இந்த வனப் பகுதியில் உள்ளன.

யானை, சிறுத்தை, கரடி, மிளா, வரையாடு, காட்டுப் பன்றி, பெரிய அணில், கருமந்தி, சிங்கவால் மந்தி என 28-க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்கள் வசிக்கின்றன. 12 வகை இடம்பெயரும் பறவைகள் உள்பட 120 வகையான பறவைகளும், ஏராளமான ஊர்வனவகை பிராணிகளும் இக் காட்டில் உள்ளன. மேலும், உயிரைக் காக்கும் 123 அரிய வகை மூலிகைகளும் இங்குள்ளன.

தொடர்ந்து எரியும் தீ: குமரி வனப்பகுதிகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, சுங்கான்கடை ஆகிய இடங்களில் தீ ஏற்பட்டு வனப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் கரிந்துள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை பூதப்பாண்டி வனப்பகுதியில் மீண்டும் தீ ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. வனப் பகுதிகளில் இதுபோன்று தொடர்ந்து ஏற்படும் தீவிபத்தால் விலங்குகள், பறவைகள், மரங்கள், மூலிகைகள் பாதிப்பிற்குள்ளாவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்.எஸ். லால்மோகன் கூறியதாவது: நிகழாண்டு வனப்பகுதியில் பல இடங்களில் தீப்பிடித்து வனவளம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக ஏற்படும் தீ மற்றும் சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் செயல்பாடுகளினால் வனப் பகுதிகளில் தீவிபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணமான சமூக விரோதிகளைக் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் காலங்களில் வனப்பகுதிகளை ஒட்டி தீ ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகளை வனத் துறையினர் செய்ய வேண்டும்.

குறிப்பாக, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தீத்தடுப்புக் கோடுகள் வெட்டும் பணிகளுடன், போதிய தீத்தடுப்புக் காவலர்களும் நியமிக்கப்பட வேண்டும். வனப்பகுதிகளில் தீ ஏற்பட்டால் அதனை விரைந்து அணைக்கும் வகையில் நவீன கருவிகள் மற்றும்  ஹெலிகாப்டர் உள்ளிட்ட வசதிகளை வனத் துறைக்கு அரசு வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments