FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரியில் மழையின் தாக்கம் குறைந்தபோதும் பேச்சிப்பாறை அணைக்கு 11,500 கனஅடி நீர்வரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கொட்டித் தீர்த்த மழை, வியாழக்கிழமை சற்று குறைந்தபோதும், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 11,500 கனஅடி நீர்வரத்து உள்ளது. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கொட்டித் தீர்த்த மழை, வியாழக்கிழமை சற்று குறைந்தபோதும், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 11,500 கனஅடி நீர்வரத்து உள்ளது. 
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 76 அடியை எட்டியிருந்த நிலையில், அணைக்கு வந்த நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர்வரை பரளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, புத்தனாறு உள்ளிட்டவற்றில்கரைபுரண்டு ஓடியது. 
இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 
ரப்பர், வாழை, நெற்பயிர், தென்னை போன்ற விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. மலையோரப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து தொழில்கள் முடக்கம் ஏற்பட்டன.
இந்நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து மழையின் தாக்கம் சற்று குறைந்தது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 63 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை 45, பெருஞ்சாணி 50,  பூதப்பாண்டி 28, சிற்றாறு1- 54, சிற்றாறு2- 42, களியல் 13, கன்னிமார் 35, கொட்டாரம் 14, குழித்துறை  52, மயிலாடி 11, நாகர்கோவில் 20, புத்தன் அணை 54, சுருளோடு 54,  தக்கலை 26, குளச்சல் 32, இரணியல் 15, மாம்பழத்துறையாறு 28, ஆரல்வாய்மொழி 10, குருந்தன்கோடு 17, பாலமோரில் 59, ஆனைக்கிடங்கில் 59.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
மழையின் தாக்கம் குறைந்தாலும், பெருஞ்சாணி அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியிலிருந்து 8,500 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 74 அடியாக இருந்த நிலையில், 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 
மேலும், சிற்றாறு 1 அணைக்கு 1692 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 11,500 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில்,  அணையிலிருந்து 9, 700 கனஅடி நீர்  திறந்துவிடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், மழை குறைந்ததால் பெருஞ்சாணி அணையின் அபாயகட்டம் ஓரளவு குறைந்துள்ளது. கோதையாற்றிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர்வரை பெருஞ்சாணி அணைக்கு வருவதால், பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரை வெளியேற்றுவது சவாலானதாக உள்ளது என்றனர்.
இதற்கிடையே, தேங்காய்ப்பட்டினம் கடலில் குழித்துறை ஆற்றுநீர் பாயும் பகுதியில், மீனவர்களின் கட்டுமரங்கள், வள்ளங்கள் அடித்துச் சென்றபோது அவற்றை மீட்க சென்ற இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த ஜோசப் சுஜில், அவரது சகோதரர் டக்ளஸ் பெவின் ஆகியோர் அங்குள்ள பொழிமுகத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments