வெள்ளப்பெருக்கால் பேச்சிப்பாறை அணையின் மேம்பாட்டுப் பணிகளில் பெரும் பின்னடைவு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்தும் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் பேச்சிப்பாறை அணையைப் பலப்படுத்தும் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
குமரி மாவட்டத்தில் பிரதான அணையான இந்த அணையில், உலக வங்கியின், அணைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 61.30 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அணையின் முன்பகுதியில் சாய்வு அணை அமைத்தல், அணையின் உள்சுவரில் ரசாயனம் கலந்த சிமென்ட் கலவை பூசுதல், கூடுதல் மறுகால் மதகுகள் அமைத்தல், பிரதான மதகு சீரமைத்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் அடங்கும்.
முதல்கட்டமாக அணையின் முன்பக்கம் சாய்வு அணை கட்டும் வகையில் கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர்க் கசிவைக் கண்டறியும் கேலரி எனப்படும் குகை அமைப்பதற்கான அஸ்திவாரப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இப்பணிகளுக்காக அணையிலிருந்து உபரி நீர் பாய்ந்து வரும் பாதைகளில் மண் திட்டுகள் ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் இயந்திரங்கள் லாரிகள் செல்லும் திடல்கள் உருவாக்கப்பட்டதுடன், தளவாடப் பொருள்கள் வைக்கப்படும் அறைகளும் கட்டப்பட்டன.
இப்பணிகளுக்காக, கடந்த ஆண்டு கும்பப்பூ சாகுபடி நிறைவடைந்த பின்னரும், அணையிலிருந்து பாசனக்கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அணையின் நீர்மட்டம் பூஜ்ஜிய அளவை நெருங்கிய நிலையில் இருந்தது. பின்னர் பெய்த தொடர் மழையையடுத்து அணையின் நீர்மட்டம் சிறிது, சிறிதாக உயர்த்தப்பட்டு இம்மாத தொடக்கத்தில் 20 அடி என்ற அளவில் நிறுத்தப்பட்டிருந்தது.
கன மழையும், கால்வாய் உடைப்பும்: இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாசனக் கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பொன்மனை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயில் தண்ணீர் விடமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 15ஆம் தேதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி மறுகால் மதகுகள் வழியாக தொடக்கத்தில் விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து, தொடர்ந்து விநாடிக்கு 8300 கனஅடி வரை வெளியேற்றப்பட்டது.
இதனால், அணையிலிருந்து வெளியேறிய தண்ணீர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்திட்டுகளை உடைத்து விட்டு கட்டுமானம் நடைபெறும் இடத்தையும் மூழ்கடித்தது.
இதையடுத்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அணையின் முன்பக்கம் பாய்ந்து வந்த தண்ணீரைத் தடுத்து மண்திட்டுகள் அமைத்து அப்பகுதியில் தொடர்ந்து தண்ணீர் புகாதவாறு தடுத்தனர்.
அணையின் முன்பு அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற இடத்தில் தண்ணீர் புகுந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.
மேலும் கடந்த சில மாதங்களாக அணையின் முன்பக்கச் சுவரில் உள்ள சிமென்ட் பூச்சுகள் அகற்றப்பட்டு, அதிக அழுத்தத்துடன் தண்ணீர் மற்றும் காற்று பாய்ச்சி சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், அப்பகுதிகளில் சகதி படிந்துள்ளது.
கட்டுமானப் பணிகளில் பின்னடைவு: அணையின் முன்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அணையின் சுவர் பகுதியை முதலிலிருந்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. இதனால் காலதாமதமும், கூடுதல் நாள்கள் பணி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இது அணை மேம்பாட்டுப் பணிகளில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் கூறியது: முதலில் அணையின் முன்பக்கம் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு, அணைச்சுவரை சுத்தம் செய்ய வேண்டும். உள்புற சுவரில் பூச்சுப் பணிகள் செய்வதற்கு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் வரையில் மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. அதே வேளையில், மறுகால் தண்ணீர் நிற்காதவரைக்கும் பணித்தளங்களில் இயந்திரங்களையும், வாகனங்களையும் இயக்க முடியாது. பெரு மழையும், வெள்ளப் பெருக்கும் அணை மேம்பாட்டுப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.