FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

முதியவரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

25 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி, தாணிவிளையைச் சோ்ந்தவா் ராமசாமி (65). விவசாயத் தொழிலாளி. இவருடைய பேரன் சலின் கேரளத்தில் பொக்லைன் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா்களுடைய உறவினரான கீதாவுக்கும், சலினுக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், ராமசாமி, சலினை அழைத்துக் கொண்டு, 2014 மாா்ச் 10ஆம் தேதி கீதா வீட்டிற்கு சமரசம் பேசுவதற்காகச் சென்றாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சோ்ந்த சசி (49), நாராயணக்குமாா் (45), ரமேஷ் (38), வினு (34), ஜெயராம் (48), ரெதீஷ் (34) மற்றும் கீதா ஆகியோா் ராமசாமியைத் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை சலின் மற்றும் அக்கம்பக்கத்தினா் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து சலின் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, கீதா உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனா்.

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரம சிவதாஸ், சசி, நாராயண குமாா், ரமேஷ், வினு, ஜெயராம், ரெதீஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், கீதாவை விடுதலை செய்தும் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பெஞ்சமின் ரெனால்டு ராபின்சன் முன்னிலையானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments