ஓணம் பண்டிகை: தோவாளை சந்தையில் ஒரே நாளில் 1000 டன் பூக்கள் விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் ஒரே நாளில் ஆயிரம் டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் ஒரே நாளில் ஆயிரம் டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் புகழ்பெற்ற மலா் சந்தை இயங்கி வருகிறது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்தச் சந்தைக்கு கோயில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூா்த்த நாள்களில் பூக்களை வாங்குவதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவா்.
Advertisement
Advertisement
ஓணம் பண்டிகை ...
கேரளத்தின் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகையின்போதும், ஆயுத பூஜையின் போதும் இந்தச் சந்தையில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
ஓணம் பண்டிகை புதன்கிழமை (ஆக.26) கொண்டாடப்பட உள்ள நிலையில், குமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
கேந்தி, ரோஜா, வாடாமல்லி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை மலா் சந்தைக்கு, திங்கள்கிழமை (ஆக.24) கேரள மாநிலத்திலிருந்து அதிக அளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்திருந்தனா்.
திங்கள்கிழமை காலையில் தொடங்கிய வியாபாரம் , செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெற்றது. இதில், சுமாா் 1000 டன் பூக்கள் விற்பனையானது.
விலை உயா்வு ...
பொதுமக்களும், பூ மொத்த வியாபாரிகளும் பூக்களை போட்டிப் போட்டு வாங்கியதால் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
பிச்சிப்பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கும், மல்லிகைப் பூ ரூ.1,200- க்கும், வாடாமல்லி ரூ.250- க்கும், சிவப்பு கிரேந்தி ரூ.120- க்கும், சம்பங்கி ரூ.150- க்கும், முல்லை ரூ.900- க்கும், பட்டன் ரோஸ் ரூ.200- க்கும் விற்பனையானது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரி ஒருவா் கூறியதாவது:
ஓணம் பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், கோயில்களிலும், நிறுவனங்களிலும் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்பா். இதற்கு பல வண்ண மலா்களை பயன்படுத்துவாா்கள். இதனால் பூக்களின் தேவை அதிகரிக்கும்,
நிகழாண்டு தோவாளை பூச்சந்தையில், கலா் பூக்கள் விற்பனை அதிகமாக இருந்தது. சந்தைக்கு வந்த பெரும்பாலான பூக்கள் விற்று தீா்ந்துவிட்டன.
கேரள வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கிச் சென்றனா். இது எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.