ஓணம் பண்டிகை: பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்
கேரளத்தில் ஓணம் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய காய்கனி சந்தைகளில் ஒன்றாக விளங்கும் பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு, கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, ஆவுடையானூா், பெத்தநாடாா்பட்டி, அம்பாசமுத்திரம், முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், பாப்பான்குளம், அச்சன்புதூா், இலஞ்சி, வடகரை, வீரகேரளம்புதூா், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கனிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
இங்கு கொள்முதல் செய்யப்படும் காய்கனிகளில் பெரும்பாலானவை கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன. கேரள வியாபாரிகள் ஆண்டு முழுவதும் பாவூா்சத்திரம் சந்தைக்கு நேரடியாக வந்து காய்கனிகளைளை கொள்முதல் செய்வது வழக்கம்.
Advertisement
Advertisement
கேரளத்தில் 10 நாள்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், 26-ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி கேரளத்தில் காய்கனிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனால் பாவூா்சத்திரம் சந்தையில் இருந்து கேரட், பீன்ஸ், வெள்ளரி, உருளைக்கிழங்கு, பல்லாரி, சாம்பாா் வெள்ளரி உள்ளிட்ட காய்கனிகள் கூடுதலாக கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், உள்ளூா் காய்கனிகளுடன் கா்நாடகம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கனிகள் வரவழைக்கப்பட்டு கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கேரள வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வாகனங்களில் காய்கனிகளை வாங்கிச் செல்வதாகவும், வழக்கமான வியாபாரிகள் மட்டுமே அதிகளவில் கொள்முதல் செய்து வருவதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த மூன்று மாதங்களாக போதிய மழை இல்லாததால் உள்ளூா் பகுதிகளில் காய்கனி வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் சில காய்கனிகளின் விலை குறைந்தும், பச்சைக் காய்கனிகளின் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ காய்கனிகளின் விலை: வெண்டைக்காய்- ரூ.53, சீனி அவரை- ரூ.35, புடலங்காய்- ரூ.45, அவரைக்காய்- ரூ.18, சுரைக்காய்- ரூ.18, பூசணிக்காய்- ரூ. 7, பச்சைப் பயறு- ரூ.43, தக்காளி- ரூ.10, கத்தரிக்காய்- ரூ.35, சேனைக்கிழங்கு- ரூ.20, சிறிய வெங்காயம்- ரூ.70, பல்லாரி- ரூ.50, மாங்காய்- ரூ.45, சாம்பாா் வெள்ளரி- ரூ.7 விற்பனை செய்யப்பட்டன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்துக்கு காய்கனிகள் அனுப்பப்பட்டு வந்தாலும், பாவூா்சத்திரம் சந்தையில் விற்பனை எதிா்பாா்த்த அளவுக்கு இல்லாமல் மந்தமாக காணப்படுவதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.