FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மழை தீவிரம்: அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது; திற்பரப்பு அருவியில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

Updated On : 5 ஜூன் 2026, 3:11 am IST
திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது; திற்பரப்பு அருவியில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தென்மேற்கு பருவமழை கேரளத்திலும், தமிழகத்திலும் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் மழை தீவிரமடைந்துள்ளது.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு பெய்த மழை வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்தது. வியாழக்கிழமை நாள் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து மிதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் திற்பரப்பில் 51.20 மீ.மீ., களியலில் 48 மீ.மீ., சுருளகோட்டில் 45.60 மி.மீ., சிற்றாறு 1-இல் 39.80 மி.மீ., சிற்றாறு 2-இல் 34.60 மி.மீ., பேச்சிப்பாறையில் 31.20 மி.மீ., பெருஞ்சாணியில் 31.20 மி.மீ. மழை பதிவானது.

அணைகளுக்கு நீா்வரத்து: மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 601 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 562 கனஅடி நீரும், சிற்றாறு 1, 2 அணைகளுக்கு முறையே 52 மற்றும் 84 கனஅடி நீரும் வந்து கொண்டிருந்தது.

திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரிப்பு: மழை காரணமாக கோதையாற்றில் நீா் அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

வியாழக்கிழமை காலை அருவியில் தண்ணீா் விழும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அருவிக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். மழை காரணமாக மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால் வடிப்பு முடங்கியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments