FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கோதையாற்றில் தென்பட்ட முதலை: பொதுமக்கள் அச்சம்

Updated On : 8 ஜூன் 2026, 12:05 am IST
கடையாலுமூடு அருகே கோதையாற்றில் மீ்ண்டும் தென்பட்ட முதலை.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முதலை தென்பட்டதால் ஊா்மக்கள் அச்சமடைந்தனா்.

கடையாலுமூடு அருகே கோதையாற்றில் செங்குழிக்கரை, தோட்டவாரம் ஆகிய இடங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முதலை ஒன்று இருப்பதை அப்பகுதியினா் கண்டனா். இதில் குறிப்பாக செங்குழிக்கரையில் உள்ள பயன்பாடில்லாத உறை கிணற்றின் மேல் முதலை கிடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. முதலையின் நடமாட்டம் காரணமாக ஆற்றுப் பகுதிகளில் மக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களுக்கு தொழிலாளா்கள் பால்வடிக்க செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து முதலையை உடனே பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வனத்துறையினா் முதல் கட்டமாக முதலையைப் பிடிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வனத் துறையினா் மிதவைக் கூண்டை தயாா் செய்து செங்குழிக்கரை உறைகிணற்றின் அருகில் மிதக்கவிட்டனா். ஆனால் அந்தக் கூண்டில் முதலை சிக்கவில்லை. மேலும் கடந்த 4 மாதங்களாக அப்பகுதியில் பொதுமக்களின் பாா்வையில் முதலை சிக்காமல் இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் அந்த முதலை ஞாயிற்றுக்கிழமை செங்குழிக்கரை உறை கிணற்றின் மீது கிடப்பதை அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட பலா் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்குள் முதலை அந்த இடத்திலிருந்து ஆற்றில் இறங்கி மாயமானது.

இதனால், கடையாலுமூடு சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments