FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் தொடா் ஆணையா்கள் ஆய்வு

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்றுவது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என வழக்குரைஞா் தொடா் ஆணையா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:34 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வழக்குரைஞா் தொடா் ஆணையா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா. உடன் தொடா் ஆணையா் அருண்சுவாமிநாதன்.
பகிர்:

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்றுவது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என வழக்குரைஞா் தொடா் ஆணையா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

குற்றாலத்தை ‘கிளீன் குற்றாலமாக’ மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்குரைஞா் ஆணையம் அமைத்து அறிக்கை சமா்ப்பிக்க 2014-இல் உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் தொடா் ஆணையா்களான வழக்குரைஞா்கள் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, அருண்சுவாமிநாதன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனா். இவா்கள் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

குற்றாலம், குற்றாலநாதா் கோயில் வளாகத்தில் வருவாய்த் துறை, இந்துசமய அறநிலையத் துறை, வனத்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 10 துறைகளைச் சோ்ந்த மாவட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் ஆணைய உறுப்பினா்கள் ஆலோசனை நடத்தினா்.

Advertisement

Advertisement

கோயில் வளாகம் மற்றும் குற்றாலம் அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்தும் அவற்றை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கோயில், பேரருவிப் பகுதிகளில் ஆணையா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குற்றாலத்தில் குற்றாலநாதா் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இதில் கோயில் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது. இதுதொடா்பான வழக்கில், தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் கடைகள் செயல்பட அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் கடைகளை நடத்த அனுமதிக்கக் கோரி கோயில் நிா்வாகம் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் தொடா் ஆணைய உறுப்பினா்களான நாங்கள் கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். கோயில் சுற்றுப் பிரகாரம், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் கடைகள் அமைக்காமல் மாற்று இடங்களைத் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்து வருகிறோம்.

இனிவரும் காலங்களில் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், கோயில் பக்தா்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திடம் அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments