சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர் தேசியக்கொடியேற்றினார். உதவி ஆணையர் கீதா, உதவி செயற்பொறியாளர் சாமுவேல்செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கே.டி.சி. நகரில் மேலாண் இயக்குநர் கி.மணி தேசியக்கொடியேற்றினார். அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய 67 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 6 ஓட்டுநர்கள், 6 நடத்துனர்களுக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குழந்தைகள் 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தேசியக்கொடியேற்றினார். சுதந்திர தின போட்டிகளில் வென்ற மாணவர்-மாணவிகளுக்கு சுழற்கழகத் தலைவர் பொன்ராஜ் பரிசுகளை வழங்கினார். பாரதியார், கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடத்தில் மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். வழக்குரைஞர் சுரேஷ், சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சுதந்திர தின விழா நடைபெற்றது. காமராஜர் திருவுருவ சிலைக்கு முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடிஆதித்தன் மாலை அணிவித்துவிட்டு தேசியக்கொடியேற்றினார். மாநகர் மாவட்ட பொதுச் செயலர் ரகுபதிராஜன், மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், பொதுச்செயலர் சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேட்டை கூட்டுறவு பண்டகசாலை முன்பு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ராமலிங்கம் தேசியக்கொடியேற்றினார்.
பாளையங்கோட்டை வெள்ளகோவில் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் இந்திரா தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ சுபைதார் மேஜர் சுப்பையா தேசியக்கொடியேற்றினார். முன்னாள் கேப்டன் ரத்தினம், ஆசிரியை ராஜவேணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
பாரதியார் உலக பொது மன்றத்தின் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைப்பின் தலைவர் அ. மரியசூசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுச்செயலர் கோ.கணபதிசுப்பிரமணியன், ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசித்தார். நல்லாசிரியர் நடராஜன், பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், கவிஞர் ஜெயபாலன், முத்துசுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள மு.ந.அப்துர்ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, பாத்திமா ஓரியண்டல் அரபி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மு.ந.அப்துர் ரஹ்மான் தொடக்கப்பள்ளி ஆகியவை சார்பில் காயிதேமில்லத் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி தலைவர் டி.இ.எஸ்.நெய்னா முகம்மது தேசியக்கொடியேற்றினார். பேராசிரியர் அ.ச.ராமையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை ஆட்சியர் (ஓய்வு) ஹெச்.விஜயகுமார் தேசியக்கொடியேற்றினார். பள்ளித் தாளாளர் கே.ஜெயபாலன், பள்ளி முதல்வர் டி.சுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலப்பாளையம் ஜவஹர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் பி.மேரி எப்சிபா சொருபராணி தேசியக்கொடியேற்றினார். பள்ளித்தாளாளர் நிலோபர் பாத்திமா, தலைமை ஆசிரியை எஸ்.ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமுமுக ரத்த தானம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவ சேவை அணிச் செயலர் அ. ஓ. அப்துல் கனி தலைமை வகித்தார். தமுமுக மாவட்டத் தலைவர் ரசூல்மை தீன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலர் அலிப் பிலால் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி சந்திப்பு சரணாலயத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. நிர்வாகி க.மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.