FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியை மூடக் கோரி மலையில் குடியேறி கிராம மக்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கல்குவாரியை மூடக் கோரி, கிராம மக்கள் மலையில் குடியேறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கல்குவாரியை மூடக் கோரி, கிராம மக்கள் மலையில் குடியேறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆனையூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தையொட்டிய பிரதான சாலை அருகே தனியார் கல்குவாரி உள்ளது. இதில், பாறைகளை உடைக்க வெடிவைக்கும்போது வீடுகள் அதிர்வதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், அந்தப் பகுதியில் கல்குவாரி செயல்படக்கூடாது எனக் கூறி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்தனராம். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்குவாரி இயங்காது என அதிகாரிகள் தெரிவித்தார்களாம். இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் கல்குவாரி இயங்க அனுமதியளித்ததைக் கண்டித்து, ஆனையூர் கிராம மக்கள் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் தங்கள் ஊருக்கு அருகேயுள்ள ஆனையூர் மலையில் குடியேறி, அங்குள்ள பாறைகளின் மீது குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் குவிக்கப்பட்டனர்.
எனினும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், அவர்கள் மலையிலேயே அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்றும், கல்குவாரியை மூடினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், இரவு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு தங்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கல்குவாரி குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளங்கோ கூறுகையில், கல்குவாரியில் வெடிவைக்கும்போது வீடுகள் அதிர்ந்து பாதிக்கப்படுகின்றன. கால்நடைகள் பயந்து அலறுகின்றன. நிலத்தடி நீர் குறைவதால், விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கல்குவாரியை மூடாவிட்டால், ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments