போலி நகைகளை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி: வியாபாரி கைது
திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்ததோடு, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்ததோடு, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி நகரம், ஜாமியா தைக்கா தெருவைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (29). கடை நடத்தி வருகிறார். இவர் தொண்டர் சன்னதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 895 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.18 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை தணிக்கை செய்தபோது, அசாருதீன் அடகு வைத்த நகைகள் போலியானவை என தெரியவந்தது.
இதையடுத்து அசாருதீனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனியார் நிதி நிறுவன மேலாளர், நீங்கள் அடகு வைத்த நகைகள் போலியானவை. உடனே பணத்தை கட்டுங்கள். இல்லையெனில் போலீஸில் புகார் அளிப்பேன் என கூறியுள்ளார். இதையடுத்து அசாருதீன், தன்னிடம் உள்ள ரூ.11லட்சத்தை செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளார்.
அதன்படி புதன்கிழமை முகமது அசாருதீன் நகையை அடகு வைத்த நிதி நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மேலாளரிடம் இரு சக்கர வாகனத்தில் ரூ.11லட்சம் வைத்திருக்கிறேன். அதை எடுத்து வருகிறேன் எனக்கூறிவிட்டு கீழே சென்றுள்ளார். கீழே வந்த அவர், ரூ.11லட்சத்துடன் தனது இரு சக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றுவிட்டதாகக் கூறி கூச்சல் போட்டுள்ளார்.
இதையடுத்து தனியார் நிதி நிறுவனத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல் உதவி ஆணையர் எஸ்கால், காவல் ஆய்வாளர் ஜெயசீலன் உள்ளிட்ட போலீஸார், அசாருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அசாருதீன் முன்னுக்குப்பின் முரணான பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், தனியார் நிதி நிறுவனம் முன் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அசாருதீன் தனியார் நிதி நிறுவனத்திற்கு நடந்தே வந்தது பதிவாகியிருந்தது. தொடர்ந்து அசாருதீனிடம் நடத்திய விசாரணையில், அவர் பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதன்பிறகு தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் சூசைமாணிக்கம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், அசாருதீனை கைது செய்தனர். மேலும் நகை அடகு வைக்கும்போது அசாருதீனுடன் வந்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.