கீழச்சுரண்டையில் திடீர் சாலை மறியல்: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சுரண்டையில் புகார் தெரிவித்தவர்களின் குடும்பத்தினரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை
சுரண்டையில் புகார் தெரிவித்தவர்களின் குடும்பத்தினரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து உறவினர்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழச்சுரண்டையைச் சேர்ந்த வேல்முருகன், மோகனசுந்தரபூபதி, முத்துப்பாண்டி ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்திலுள்ள சமாதியை அவமரியாதை செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்படுகறது.
புகாரின்பேரில், குரும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்வதற்காக கீழச்சுரண்டைக்கு புதன்கிழமை வந்தனராம். அங்கு, மூவரும் இல்லாததால் வேல்முருகனின் உறவினர்களான ஆனந்தராஜ், காளித்துரை மற்றும் சுதா, மகேஸ்வரி, செவ்வந்தி ஆகியோரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனராம்.
போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து அவர்களின் உறவினர்கள் சுரண்டை - திருநெல்வேலி பிரதான சாலையில் பிற்பகல் 12.30 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சுரண்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, விசாரணைக்கு அழைத்து சென்றவர்களில் பெண்களை மட்டும் போலீஸார் விடுவித்தனராம். எனினும், வழக்கில் தொடர்பில்லாதவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டனர். தென்காசி டி.எஸ்.பி. மணிகண்டன், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் நல்லையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 3 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.