நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி: மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுமா?
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதி மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாததால்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதி மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாததால் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் செயல்பட்டு வருகிறது. 1961-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி திறக்கப்பட்ட இம் மருத்துவமனையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள்.
1,400 படுக்கை வசதிகள் உள்ளன. தீக்காயம், தலைக்காயம், தோல், மகப்பேறு, குழந்தைகள் நலம் என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. உள்நோயாளிகள் தவிர, தினந்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
குழந்தைகள் மருத்துவப் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு போன்றவற்றில் உள்நோயாளிகளுக்கு உதவியாக குடும்பத்தினர் இரண்டு முதல் நான்கு பேர் வரை தங்குகிறார்கள்.
உணவுப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது, துணிகளைத் துவைப்பது, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இவர்கள் தங்குகிறார்கள். ஆனால், நோயாளிகளின் உறவினர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இவற்றை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன்பேரில் அண்மையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. அதுவும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.
அவதி: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே திருநெல்வேலி மாநகராட்சி நிதியின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது.
கடந்த 2 ஆம் தேதி அதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள அறைகளில் தலா 25 பேர் தங்கும் வசதியும், கழிப்பறை, மின்விசிறி, பொருள்களை வைப்பதற்கான அலமாரி வசதியும் செய்யப்பட்டுள்ளன. திறப்பு விழா முடிந்து 4 நாள்களாகியும் அந்த விடுதி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெயிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், நோயாளிகளின் உறவினர்கள் சுவர் ஓரங்களில் அமர்ந்து அவதிப்படுகிறார்கள். கைக்குழந்தைகளுடன் தொட்டில் கட்டி தங்கியிருக்கும் மக்கள், கொசுவால் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.
இதுதவிர வெந்நீர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போதிய அளவில் இல்லாததால் கடைகளில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
இன்று திறக்க நடவடிக்கை: இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் கூறியது: அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதி, மாநகராட்சி நிதியுதவியில் கட்டப்பட்டது. அங்குள்ள கழிப்பறைகளுக்கு பாதாளசாக்கடை இணைப்பு வசதி செய்து முடித்ததும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க சாவிகளைத் தருவதாக தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே மக்கள் சிரமம் குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் மருத்துவமனை சார்பில் பேசப்பட்டுள்ளது. அவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 7) சாவிகளை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகவே, வியாழக்கிழமைமுதல் மக்கள் அந்த விடுதியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.