பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டும்: எல்.ஐ.சி. மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எல்.ஐ.சி
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் அமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
எல்.ஐ.சி. தென்மண்டல உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, அமைப்பின் தென்மண்டல இணை அமைப்பாளர் ஜெ. விஜயா தலைமை வகித்தார். மாநாட்டை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகை ரோஹிணி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் இணைச் செயலர் எம். கிரிஜா, தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் எம். குன்னிகிருஷ்ணன், பொதுச்செயலர் டி. செந்தில்குமார், அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலர் பி. கற்பகம் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோட்டப் பொதுச்செயலர் செ. முத்துகுமாரசுவாமி, கோட்டத் தலைவர் ஆர். மதுபால், இணைச் செயலர்கள் ஆர். பட்டன், பொன்னையா, பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் மகளிர் அமைப்பின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து அமைப்பின் எதிர்கால செயல்திட்டம் குறித்த விவாதம், கண்காட்சி திறப்பு, போராளிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீர்மானங்கள்: நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்-2013 சட்டத்தை அமல்படுத்த வேண்டும்;
திரைப்படங்கள், வெகுஜன ஊடகங்கள், விளம்பரங்களில் இடம்பெறும் பாலின பாரபட்ச சித்திரிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்; எல்.ஐ.சி. நிறுவனத்தில் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க வேண்டும்; காப்பீட்டு ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்; எல்.ஐ.சி. மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும்; தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்யும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மகளிர் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆர். கல்பனா வரவேற்றார். இணைச் செயலர் ஆர்.எஸ். செண்பகம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.