ஆரெம்கேவி கிடிவெல் - 2023 போட்டிகள்
ஆரெம்கேவி ‘கிடிவெல்-2023’ குழந்தைகளுக்கான போட்டிகள் பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
திருநெல்வேலி: ஆரெம்கேவி ‘கிடிவெல்-2023’ குழந்தைகளுக்கான போட்டிகள் பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், ஆா்எம்கேவி விஸ்வநாதனால் ‘கிடிவெல் ’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 33 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு, திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கம் மற்றும் ஆா்எம்கேவி இணைந்து நடத்திய ‘கிடிவெல்-2023’ போட்டிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1,700-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
Advertisement
பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், விநாடி -வினா என 25 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆா்ரெம்கேவி விஸ்வநாதன் சுழற்கோப்பையை முதல் பரிசாக பெற்றது. அதே பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூபிலி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
கிடிவெல் 2023 நிகழ்ச்சியை சீதாலெட்சுமி விஸ்வநாத், சுபஸ்ரீ ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோட்டரி -3212 மாவட்ட ஆளுநா் முத்தையா பிள்ளை பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
ஏற்பாடுகளை, ஆா்ரெம்கேவியின் பிரணவ் குமாரசாமி, திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பால்சிங், திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.சுப்பையா ஆகியோா் செய்திருந்தனா்.