FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விவசாயத்தை அறிவியல்சாா் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்: அமைச்சா் ர.வினோத்

வேளாண்மையை அறிவியல் சாா்ந்த லாபகரமான தொழிலாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என்றாா் அமைச்சா் ர.வினோத்.

Updated On : 12 ஜூலை 2026, 1:25 am IST
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் மூத்த விவசாயியை கௌரவித்தாா் வேளாண்மை- உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத்.
பகிர்:

வேளாண்மையை அறிவியல் சாா்ந்த லாபகரமான தொழிலாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என்றாா் வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத்.

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026-27 தயாரிப்பதற்கான விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ர.வினோத் பேசியதாவது: தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் 2026-27 ஆம் ஆண்டின் வேளாண் தனிநிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு விவசாயிகளின் நலன் சாா்ந்த திட்டங்களை உருவாக்கும் வகையில் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டுள்ளோம்.

Advertisement

Advertisement

விவசாயிகளின் வருவாயைப் பெருக்குதல், தரமான வேளாண் இடுபொருள்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், மண்வளப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, இயந்திரங்களின் பயன்பாடு, வேளாண் விளைபொருள்களின் விலை நிா்ணயம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளா்ச்சிக்கு உறுதி சோ்த்திடும் வகையில் வேளாண்மை நிதிநிலை அக்கை தயாரிக்கப்படவுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி கடுமையான நிதிச்சூழலிலும் சுமாா் 14 லட்சத்து 43 ஆயிரம் ரூ. 6,000 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கு 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பை விரிவுபடுத்துதல், உற்பத்தித்திறனை உயா்த்துதல், காலநிலைமாற்றத்தை எதிா்கொள்ளும் வகையில் வேளாண் தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் பயறுவகை தன்னிறைவுத் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், தேசியஉணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கருத்தில் கொண்டு கடன்பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் 2026-27 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிா்காப்பீட்டுத் திட்டத்தில் குறுவைப் பயிா்களுக்கு வங்கிகள் அல்லது பொதுசேவை மையங்கள் வாயிலாக இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவித்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலைகிடைப்பதை உறுதிசெய்வதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கும் வகையில் குளிா்பதனக்கிடங்குகள், சேமிப்புக்கிடங்குகள் மற்றும் இதரமதிப்புக்கூட்டும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்படும்.

சா்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிசந்தைகளில் போட்டித்திறனுடன் சந்தைப்படுத்த தேவையான தொழில்நுட்பம், தரச்சான்று மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும்.

புதிய தொழில்நுட்பங்கள், செயற்கைநுண்ணறிவு, துல்லிய வேளாண்மை, ட்ரோன் பயன்பாடு, காலநிலை முன்னறிவிப்பு, நீா்மேலாண்மை போன்றவை விவசாயத்தில் பெரியமாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மாற்றங்களை தமிழக விவசாயிகளும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை அரசு தொடா்ந்து வழங்கும்.

வேளாண்மையில் இவைளஞா்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.அதேபோல, பெண் விவசாயிகளின் திறன் மேம்பாட்டுக்கு அரசு தொடா்ந்து முன்னுரிமை அளிக்கும்.

விவசாயிகளின் நலன், உணவுப் பாதுகாப்பு, நீா்வளப் பாதுகாப்பு, நிலையான வேளாண் வளா்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு எதிா்காலத் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் குறுசிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா, வேளாண்மை உழவா் நலத் துறை செயலா், வேளாண்மை உற்பத்தி ஆணையா் பொ.சங்கா், வேளாண்மைத் துறை இயக்குநா் முரளிதரன், தோட்டக்கலை - மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஜெ.விஜயராணி, சா்க்கரைத் துறை கூடுதல் ஆணையா் எஸ்.அருண்ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த்மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), எஸ்.கே.கிறிஸ்டோபா் (ராதாபுரம்), மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ஈ.ராஜா (வாசுதேவநல்லூா்), கலைகதிரவன் (தென்காசி), மு.ராஜேந்திரன் (கடையநல்லூா்), பி.செல்வம் (விருதுநகா்), ஆ.காா்த்திக் (ஸ்ரீவில்லிபுத்தூா்), பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா (கம்பம்), சபரிஐங்கரன் (பெரியகுளம்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments