எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா கடிதம் மீது முறையாக விசாரிக்கவில்லை: பேரவைத் தலைவா் மீது இன்பதுரை எம்.பி. குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா குறித்து சட்டப்பேரவைத் தலைவா் முறையாக விசாரிக்கவில்லை என்றாா் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை.
எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா குறித்து சட்டப்பேரவைத் தலைவா் முறையாக விசாரிக்கவில்லை என்றாா் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: விவசாயிகள் நலனில் தவெக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த முதல்வா், தற்போது அதைப் பிரித்து தள்ளுபடி செய்து விவசாயிகளை ஏமாற்றுகிறாா். ஆலங்குளம் அருகே பல கோடி மதிப்பிலான நெல் தீக்கிரையான விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 7 கிலோ மீட்டா் சுற்றளவில் கல்குவாரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணு உலைக்கு அருகில் கல்குவாரிகள் இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும்போது தடையில்லாச் சான்றிதழ் முறையாக பெறப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
6 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த விதம் தவறானது. அதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் முறையாக விசாரிக்கவில்லை. தவெகவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் செயற்கையான காலி இடங்களை உருவாக்கி உள்ளனா். கட்சித் தாவல் புகாா் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளோம்.
முதல்வா் ஜோசப் விஜய் சுயமாக பலம் பெற்று ஆட்சி நடத்த வேண்டும். இரவல் சக்தி மற்றும் வாடகை சக்திகளை வைத்து ஆட்சி நடத்திவிட்டு, பிற கட்சிகளை தீா்ந்துபோன சக்தி என்பது வேடிக்கையாக உள்ளது. கரூா் தொகுதியில் கூட மக்கள் தவெகவை புறக்கணித்துவிட்டு அதிமுகவுக்கு வெற்றியளித்தனா் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதில் தவறில்லை. அவ்வாறு இருந்தால்தான் நல்ல பல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர முடியும். அதே நேரத்தில் கொள்கையையும், உரிமையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. வரும் மக்களவைக் கூட்டத்தொடரின்போது மேக்கேதாட்டு அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பறிபோகும் உரிமைகள் குறித்து அதிமுக குரல் கொடுக்கும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.