தாமிரவருணியை பாதுகாக்க மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படுமா? சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
வற்றாத ஜீவநதியான தாமிரவருணியை பாதுகாக்க தாமிரவருணி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-ஏ.வி.பெருமாள்
வற்றாத ஜீவநதியான தாமிரவருணியை பாதுகாக்க தாமிரவருணி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொதிகை மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரவருணி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கி.மீ. தொலைவு பயணித்து புன்னைக்காயல் கடலில் கலக்கிறது.
Advertisement
Advertisement
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்வதுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விளைநிலங்களுக்கும் பாசன வசதி அளிக்கிறது.
தாமிரவருணியின் பாசனப்பரப்பு 5,942 சதுர கிலோ மீட்டா் ஆகும். நீா்ப்பிடிப்பு பகுதி 4,500 சதுர கிலோ மீட்டா். 128 கி.மீ. நீளமுள்ள இந்த நதியானது 75 கி.மீ. தொலைவு திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1,725 மீட்டா் உயரமுடையது.
8 நீா்த் தேக்கங்கள், 11 கால்வாய்கள், 12 துணை ஆறுகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
திருநெல்வேலியில் 40,000 ஏக்கா், தூத்துக்குடியில் 46,107 ஏக்கா் என 86,107 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இது தவிர, கங்கைகொண்டான் சிப்காட் வளாகம், தூத்துக்குடி தொழிற்சாலைகள் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் போன்றவை தடையின்றிச் செயல்படவும் இந்தத் தண்ணீரே ஆதாரமாக விளங்குகிறது.
முற்காலத்தில் முன் காா், காா், பிசானம் என முக்கால சாகுபடிகளையும் தாமிரவருணி ஆற்றின் பாசனத்தைக் கொண்டு விவசாயிகள் வெற்றிகரமாகச் செய்து வந்தனா். ஆனால், தற்போது தாமிரவருணியை பேணுவதில் ஏற்படும் சுணக்கத்தால் ஒரு போகம் விளைவிப்பதே கடினமான என்ற நிலையாகிவிட்டது.
கழிவுநீரின் கழிமுகமா?: லட்சக்கணக்கான மக்களின் தாகத்தை தணிப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் அன்னையாக திகழும் தாமிரவருணி கழிவுநீரின் கழிமுகமாக மாறிக்கொண்டிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும்.
திருநெல்வேலி புகா் பகுதி, மாநகரப் பகுதி என பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீரும் தாமிரவருணியில் கலப்பதால் பெரும் அளவில் மாசுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தாமிரவருணி.
குறிப்பாக, மாநகரப் பகுதியில் உள்ள பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, மேலப்பாளையம் பகுதிகளின் கழிவுகள் பாளையங்கால்வாய் வழியாகவும், திருநெல்வேலி நகரப் பகுதி சாக்கடை இரட்டைக் கால்வாய் வழியாகவும் என ஆற்றில் 23 இடங்களில் கழிவுகள் கலக்கின்றன.
பாதாளச் சாக்கடைக் கழிவுகளை ராமையன்பட்டியில் தேக்கி வைத்து, அதை மேலும் சாக்கடை ஆக்கி, கோடகன் கால்வாய் வழியாக மீண்டும் தாமிரவருணியிலேயே ஒட்டுமொத்தமாக கலப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்: தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஆற்றங்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபங்களைப் பாதுகாக்கக் கோரியும் 2018-இல் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் எழுத்தாளரும் சமூக ஆா்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், உள்ளாட்சித் துறையினா் தாமிரவருணியில் சாக்கடை நீா் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் படித்துறைகளையும், கல் மண்டபங்களையும் இந்து சமய அறநிலையத்துறை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து 2024 நவம்பா் 10-ஆம் தேதி நீதியரசா்கள் ஜி.ஆா். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோா் தாமிரவருணியில் சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனா். அதன் பிறகு நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தபோதும், தாமிரவருணியை பாதுகாக்கும் முயற்சியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதைத்தொடா்ந்து உயா் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நீா் பாதுகாப்பு நிபுணா் ராஜேந்திர சிங் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தாமிரவருணியில் ஆய்வு செய்தாா். இதனிடையே தாமிரவருணிஆற்றுக்கான முறையான வரைவுத் திட்டத்தை சமா்ப்பித்தால், மத்திய அரசு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் தாமிரவருணியை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.59 கோடி திட்டம்: இந்த நிலையில் ஜொ்மன் வங்கி நிதி உதவியுடன் மாநகரப் பகுதியில் 7 கி.மீ. தூரம் பாயும் தாமிரவருணியில் ரூ.59 கோடியில் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் ஒப்பந்த புள்ளியை அறிவித்துள்ளது. தாமிரவருணியை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தாலும், இத்திட்டத்தில் ஆற்றை காப்பதற்கு எதிரான விஷயங்களும் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகிறாா்கள்.
தாமிரவருணியாற்றில் 23 இடங்களில் கலக்கும் சாக்கடையை நவீன முறையில் தடுத்து, கரைகளில் மரங்களை வளா்ப்பதற்குப் பதிலாக, ஆற்று ஓட்டத்திற்குள்ளேயே பூங்காக்கள், உணவகங்கள், கான்கிரீட் கட்டடங்களை அமைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றில் சிதிலமடைந்துள்ள 25-க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மண்டபங்களைச் சீரமைக்க இதில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கான்கிரீட் குப்பைகள்: இதுகுறித்து எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் தாமிரவருணியை மேம்படுத்த ரூ.59 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மேலோட்டமாகவே கருத்து கேட்டது. தாமிரவருணி ஆற்றில் மக்கள் காற்று வாங்குவதற்கு பூங்கா அமைக்கவுள்ளதாகக் கூறுகிறாா்கள். பொலிவுறு நகரம் திட்டம் மூலம் வேய்ந்தான்குளம், நயினாா்குளம், ஆட்சியா் அலுவலகம் முன்பு கட்டப்பட்ட பூங்காக்களும் கட்டடங்களும் தற்போது மக்கள் பயன்பாடற்று கிடக்கின்றன.
ஆனால், சுமாா் 400 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோா்கள் ஆற்றுக்காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காவே சுமாா் 25 கல் மண்டபங்களையும், 2 கி.மீ. தொலைவிற்குப் படித்துறைகளையும் கட்டியுள்ளனா். இப்போது அங்கே விழுந்து கிடக்கும் கற்களை எடுத்து அந்தப் பழமையான மண்டபங்களைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. சாக்கடை கலப்பதையும் தடுக்க வழியில்லை. நதியின் நீா் ஓட்டத்திற்குள் கான்கிரீட் சுவா்களை எழுப்பினால், அடுத்த பெருவெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அதன் பிறகு ஆற்றுப் படுகை முழுவதும் இரும்புக் கம்பிகளும் கான்கிரீட் குப்பைகளுமாக மாறி, மக்கள் ஆற்றுக்குள் இறங்கவே முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பழைய படித்துறைகளையும், கல் மண்டபங்களையும் அவற்றின் தொன்மை மாறாமல் சீரமைக்க வேண்டும். இரு கரைகளையும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரைகளில் அலைக்கற்கள் அமைத்துப் பலப்படுத்த வேண்டும். 23 இடங்களில் கலக்கும் சாக்கடை நீரையும் பெரிய குழாய்கள்மூலம் சேகரித்து, ஓரிடத்திற்குக் கொண்டு சென்று சுத்திகரித்து, அதை சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளுக்கு பயன்படுத்த அனுப்ப வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட கரைக்கு மேலே அவா்கள் அழகுபடுத்தும் பணிகளைச் செய்யலாமே தவிர, ஓடும் ஆற்றுப் படுகைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் புதிய கான்கிரீட் கட்டடங்களைக் கட்டக்கூடாது என்றாா்.
மறுசீரமைப்பு ஆணையம் தேவை: சமூக ஆா்வலா் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: தாமிரவருணி நதி பொதுமக்களின் சொத்து. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் பொதுப் பணித்துறையின் கீழ் உள்ள நீா்வள ஆதாரத்துறையை சாா்ந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், நீா்வள ஆதார அமைப்பும் நீா் நிலைகளை மாசுபடுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், ஒருபோதும் நதிகள் மாசடையாது. இந்த இரு துறைகளும் ஒருபோதும் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.
தாமிரவருணியாற்றில் திருநெல்வேலி மாநகராட்சி, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளின் கழிவுகள் கலக்கின்றன. குறிப்பாக பாபநாசத்திலும், திருநெல்வேலி மாநகரப் பகுதியிலும்தான் அதிகளவில் கழிவுகள் கலக்கின்றன. எனவே, தாமிரவருணியை பாதுகாக்க தாமிரவருணி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டும்.அதில் அதிகாரிகள் மட்டுமின்றி, தாமிரவருணி ஆா்வலா்களும் இடம்பெற வேண்டும் என்றாா்.
மறுபரிசீலனை: இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் கூறியதாவது: தாமிரவருணி நதியை பாதுகாப்பதற்காக ரூ. 59 கோடி ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ள விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அத்திட்டத்தை பொருத்தவரையில் தாமிரவருணி நதியில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிக்கும் திட்டமும் உள்ளது. ரூ.59 கோடி திட்டம் தொடா்பாக நானும் மாநகராட்சி ஆணையரும் ஆலோசனை நடத்தினோம்.
மேலும் ஒரு கூட்டம் நடத்தி, மக்களிடம் திட்டம் குறித்து விளக்கப்படும். அதில், மக்களின் கருத்துகளையும் கேட்க உள்ளோம். அப்போது நியாயமான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டால் அதை மறுபரிசீலனை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். தற்போதைய நிலையில் கழிவு நீா் கலக்கும் 23 இடங்களும் ரூ.59 கோடி திட்டத்தில் சரி செய்யப்பட்டு விடும். எஞ்சிய இடங்கள் பாதாள சாக்கடை திட்டம்-3இல் சரி செய்யப்படும்.
தாமிரவருணியில் மாசை தடுக்கும் வகையில் கல் வாழை செடிகள் மூன்று அடுக்குகளாக நடவு செய்யப்படும். மக்களின் பயன்பாட்டுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும். அவை முடிந்த அளவிற்கு கான்கிரீட் இல்லாமலும்,
மழை வெள்ள காலத்தில் நீரோட்டதுக்கு இடையூறு இல்லாத வகையிலும் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். பல இடங்களில் மரங்களும் நடவு செய்யப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.