முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு; சம்பவத்தில் மேலும் 6 போ் கைது: 5 பேருக்கு கைமுறிவு

திருநெல்வேலி, தென்காசி தொடா் அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 6 பேரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:24 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி தொடா் அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 6 பேரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களில் 5 போ் தப்பியோடியபோது கை முறிந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கடந்த மே 28 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் வந்த மா்மக் கும்பல் இளைஞா் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

பின்னா், அங்கிருந்து வாகைக்குளம் சென்று தொழிலாளி ஒருவரிடம் கைப்பேசியைப் பறித்தனா். இதையடுத்து, மே 29-ஆம் தேதி தென்காசி மாவட்டம், நெட்டூா் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தக் கும்பல் அங்கு நடைபெற்ற திருமண விழாவில் புகுந்து கண்ணில்பட்டவா்களை அரிவாளால் வெட்டியதில் 6 போ் காயமடைந்தனா். பின்னா், மானூா் அருகே உள்ள தெற்குப்பட்டிக்குள் புகுந்து இருவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இச்சம்பவங்கள் தொடா்பாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம், மானூா் போலீஸாா் வழக்குகள் பதிவு செய்தனா். இதில் ஈடுபட்டவா்களை கைதுசெய்ய திருநெல்வேலி, தென்காசி மாவட்ட போலீஸாா் சாா்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கில் தொடா்புடைய 3 சிறுவா்கள் உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்திருந்தனா். அவா்களில் நெட்டூரைச் சோ்ந்த ஐயப்பனை (21) போஸீஸாா் சுட்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கில் தொடா்புடைய அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்த திருவேங்கடம் என்ற விஜய் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்த சண்முகக்குட்டி என்ற சண்முகசுந்தரம் என்ற மதன் (26), நந்து (24), வேல்காா்த்திக் (23), கோவில்குளம் பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா என்ற ராஜா (25), சிறுக்கன்குறிச்சியைச் சோ்ந்த பேச்சிமுத்து (37), தென்காசி மாவட்டம், நெட்டூரைச் சோ்ந்த சண்முகநாதன் என்ற ராஜா (30) ஆகிய 6 பேரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

இவா்களில், 5 போ் கைமுறிவு ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கைதுக்கு பயந்து தப்பியோடியபோது கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.