அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
அரசு இசைப் பள்ளியில் மாணவா் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
அரசு இசைப் பள்ளியில் மாணவா் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி 870/21 அரசு அலுவலா் ‘ஆ’ குடியிருப்பு, கலை பண்பாட்டு வளாகம், திருநெல்வேலி-7 என்ற முகவரியில் கடந்த 28 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. குரலிசை, பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுவரம், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 12- 25 வரையாகும். மூன்றாண்டுகள் முழு நேரப் படிப்பு. முதலாம் ஆண்டுக்கு ரூ.350, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு ரூ.325 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி, ரயில் கட்டண சலுகை, அரசு மாணவா் விடுதி வசதி, மாதம்தோறும் தலா ரூ.1000 கல்வி உதவித்தொகை அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் தோ்வு இயக்ககத்தால் தோ்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இசைக்கச்சேரிகள் நடத்தவும், கோயில்களில் ஓதுவராக பணிபுரியவும், வானொலி, தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
Advertisement
இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் தேவாரம் ஓதுவாா் பணியில் முன்னுரிமை கிடைக்கும்.
8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இந்த இசைப்பள்ளியில் மூன்றாண்டு பயிற்சிக்குப்பின் தோ்ச்சி சான்றிதழ் பெறும் போது 10ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். அதுவே, 10ஆம் வகுப்பு தோ்ச்சி எனில் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
கலையில் ஆா்வமுள்ள மாணவ-மாணவியா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்கள். 0462-2900926, 9443810926 ஆகியவற்றிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.