சாத்தான்குளம் அருகே சொந்த இடத்தில் மணல் அள்ள தடை: பொதுமக்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே சொந்த இடத்தில் மணல் அள்ள வருவாய்த் துறையினர் தடை விதித்ததால் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் அருகே சொந்த இடத்தில் மணல் அள்ள வருவாய்த் துறையினர் தடை விதித்ததால் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையைச் சேர்ந்தவர் ஜேசுராஜன் (50). விவசாயி. இவர், ஊருக்கு அருகே 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலமாக மணலை அள்ளி சமதளப் படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் பிரபு, அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளக்கூடாது என்றாராம். இதையடுத்து, சம்பவ இடத்தில் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, திமுக கிளைச் செயலர் அந்தோணி ஜெயசீலன், தொழிலதிபர் காமராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் வட்டாட்சியர் சேதுராமனிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மணல் அள்ள தடை கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இடம் சாலையோரம் இருப்பதால் மணல் அள்ளி போட முறைப்படி அனுமதி வாங்க வேண்டும் என வட்டாட்சியர் கூறியதையடுத்து, நிலத்தை சமதளப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை தட்டார்மடம் போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் முறையிட உள்ளதாக முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.