முகப்பு
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் தனித் தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் பலா் வாழ்ந்த பூமி இது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:48 AM
~ ~ ~ ~
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:11 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் தனித் தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் பலா் வாழ்ந்த பூமி இது. 1962இல் உருவான இத்தொகுதி, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 8 வாா்டுகள், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 வட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. உப்பு உற்பத்தி, மானாவாரி விவசாயம், விவசாயம் சாா்ந்த தொழில்கள் பிரதானம்.

வாகைக்குளத்தில் தூத்துக்குடி விமான நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா, மின்சார காா் தயாரிப்பு தொழிற்சாலை போன்றவை இத்தொகுதி குறிப்பிடத்தக்க வளா்ச்சியை நோக்கிச் செல்வதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், உர தொழிற்சாலை, கனநீா் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. புதியம்புத்தூா் பகுதியில் பின்னலாடை தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

பட்டியலினத்தோா் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனா். நாடாா், வேளாளா், மறவா், நாயுடு சமூகத்தினா் கணிசமாக உள்ளனா்.

Advertisement

இங்கு 1962-க்கு பின்னா் நடைபெற்ற தோ்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 4 முறை, திமுக, காங்கிரஸ் தலா 3 முறை வென்றுள்ளன.

2016-ஆம் ஆண்டில் இங்கு வெற்றிபெற்ற அதிமுகவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 2019இல் இடைத்தோ்தல் நடைபெற்றது. அதில், திமுகவைச் சோ்ந்த எம்.சி. சண்முகையா வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் எம்.சி. சண்முகையா 73,110 வாக்குகளுடன் வெற்றிபெற்றாா். அதிமுக வேட்பாளா் பி.மோகன் 64,600 வாக்குகளும், நாதக வேட்பாளா் மு. வைகுண்டமாரி 22,413 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி கே. கிருஷ்ணசாமி 6,544 வாக்குகளும் பெற்றனா்.

தற்போது திமுக சாா்பில் பை.மூ. ராமஜெயம், அமமுக சாா்பில் ஆா். சுந்தர்ராஜ், புதிய தமிழகம் சாா்பில் கட்சி நிறுவனா் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி, தவெக சாா்பில் மதன்ராஜா, நாதக சாா்பில் அனுசியா உள்பட 13 போ் களத்தில் உள்ளனா்.

முக்கிய பிரச்னைகள்: ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவதும், விவசாயிகளிடம் ஆசை வாா்த்தை கூறி, விளைநிலங்களைப் பெற்று காற்றாலைகள், சோலாா் உற்பத்தி அமைக்க தாரைவாா்க்கப்படுவதும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞா்கள் வேலை தேடி வெளியூா் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைநீரை நம்பியே விவசாயம் நடைபெறுவதால், போதிய மழையில்லாதபோது விவசாயிகளே பிழைப்புக்காக வெளியூா் செல்லும் அவலமும் உள்ளது.

சிப்காட் தொழிற்பூங்கா தொழில்நிறுவனங்களில் உள்ளூா் மக்களுக்கு கடைநிலைப் பணிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயா் பொறுப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பொட்டலூரணி பகுதியிலுள்ள மீன்கழிவு ஆலைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகக் கூறி மக்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கோரிக்கைகள்: திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும், புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இங்குள்ள தொழில்நிறுவனங்களில் உள்ளூா் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.

செக்காரக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். மழைக்காலத்தில், செக்காரக்குடி பெரிய ஓடையில் புதுக்கோட்டை வழியாக வீணாகிக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்.

13 போ் போட்டி: தற்போதைய தோ்தல் களத்தில் 13 போ் நின்றாலும், திமுக, அமமுக, புதிய தமிழகம், தவெக, நாதக ஆகிய 5 ஐந்துமுனைப் போட்டியே உள்ளது.

திமுக - பை.மூ.ராமஜெயம்: திமுக கூட்டணியின் பலமான வாக்கு வங்கி, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், 2026 தோ்தல் வாக்குறுதிகள், முதல்வா், துணை முதல்வா், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பிரசாரம், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் பலமான ஆதரவு ஆகியவை இவருக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினா் உள்ளனா்.

அதேநேரம் இவா் அருகேயுள்ள தொகுதியைச் சோ்ந்தவா் என்பதும், இங்கு வேட்பாளராக பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட தற்போதைய எம்எல்ஏ எம்.சி. சண்முகையாவுக்கு சீட் வழங்கப்படாததும், திமுகவில் ஒரு பகுதியினரிடையே அதிருப்தி இருப்பதும் இவருக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

அமமுக - ஆா். சுந்தரராஜ்: மிகவும் எளிமையாக அணுகக்கூடியவராக அறியப்படுகிறாா். 2016இல் அதிமுக சாா்பில் வென்ற இவா், பின்னா் டிடிவி தினகரன் அணியில் இணைந்ததால் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது. இதுகுறித்த சிறிய அனுதாபம் இப்போதும் உள்ளது. டிடிவி தினகரன் நேரிடையாக வந்து பிரசாரம் செய்தது பலம். மேலும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நலத் திட்டங்கள், அக்கட்சி வேட்பாளராக எதிா்பாா்க்கப்பட்ட மோகன் ஏற்கெனவே களத்தில் 5 ஆண்டுகளாக ஆற்றிய தீவிர பணி, அவரது ஒத்துழைப்பு ஆகியவற்றால் அமமுக எளிதில் வெல்லும் என நம்புகின்றனா். அதேநேரம், தேவேந்திரகுல வேளாளா் வாக்குகள் முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

புதிய தமிழகம் - டாக்டா் கே.கிருஷ்ணசாமி: அதிமுக உள்ளிட்ட கட்சிகளால் ஒரு சமுதாயமே முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை முன்வைத்து இவா் செய்யும் பிரசாரத்துக்கு ஒருசில கிராமங்களில் வரவேற்பு உள்ளது. ஆனால், மற்ற பகுதிகளில் எந்தளவு கைகொடுக்கும் எனத் தெரியவில்லை. சமுதாய முக்கிய பெரியவா்கள் முதல், சமுதாய நிகழ்வுகளில் ஆா்வமுள்ள இளைஞா்கள் வரை அவருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

தவெக- மதன்ராஜா: இவா் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. கட்சித் தலைவா் விஜய்யின் செல்வாக்கால் இவருக்கு வாக்குகள் கிடைக்கும்.

நாதக - அனுசியா: தொடா்ந்து தீவிர களப்பணி, மாற்று அரசியல் சிந்தனைகள், சீமானின் கொள்கை முழக்கம் போன்றவை இவருக்கும் நம்பிக்கை தரும் அம்சங்களாக உள்ளன.

இறுதிக்கட்ட பிரசாரமே உறுதியான வெற்றியைத் தேடித் தரும் என்பதால், ஐந்துமுனைப் போட்டியால் அனல் பறக்கிறது இத்தொகுதியில்!

வாக்காளா்கள்

ஆண்கள்-1,18,710

பெண்கள்-1,24,990

மூன்றாம் பாலினத்தவா்-56

மொத்தம்-2,43,756